திருகோணமலை பொது வைத்தியசாலையில் உள்ள PCR இயந்திரத்தினை விரைவில் இயக்குவதற்குரிய நடவடிக்கைகளை வைத்தியசாலை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் தொற்றை உறுதிப்படுத்தும் முகமாக அவர்களுடைய மாதிரிகள் மட்டக்களப்பு போன்ற வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு பெறுபேறுகள் பெறப்பட்டு வருகின்றன.
இதற்காக அம்பியூலன்ஸ் வண்டி ஒன்றும், மூன்று ஊழியர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இதில் காலதாமதம் ஏற்படுவதனால் தொற்றை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வதனாலும்,
மரணிக்கின்றவர்களின் இறுதி நிகழ்வை தாமதமின்றி மேற்கொள்வதற்கும் திருகோணமலை வைத்தியசாலைக்கென PCR இயந்திரம் ஒன்று தேவை என்றதன் அடிப்படையில் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் முயற்சியால்
நிறுவனம் ஒன்றின் நிதியுதவியுடன் PCR இயந்திரம் ஒன்று சில மாதங்களுக்கு முன்னர் திருகோணமலை வைத்தியசாலைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.
எனினும் அந்த இயந்திரத்தின் மூலம் இதுவரை வெறும் 12 பரிசோதனைகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு இயந்திரம் கிடப்பில் கிடப்பதாகவும் இருப்பினும்
அவ் இயந்திரத்தினை இயக்குவதற்குரியவர்களுக்கான சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.
இந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையானது PCR பெறுபேறுகளுக்காக தொடர்ந்தும் வெளி மாவட்ட வைத்தியசாலையிலேயே தங்கியிருக்கின்றது.
இதனால் ஒரு மணித்தியாலத்தில் பெறவேண்டிய பெறுபேற்றிற்காக இரண்டு தொடக்கம் மூன்று நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது.
நடப்பது என்ன?
அத்துடன்திருகோணமலை பொது வைத்தியசாலையில் இரண்டு வாரங்களுக்கு மேலாக இன்னும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படாமல் பல நோயாளிகள் வைத்தியசாலையின் களங்களில் இருக்கின்றார்கள்.
விசேடமாக பல கர்பிணித் தாய்மார்கள் இந்த நிலையை எதிர் கொண்டு வருகின்றார்கள்.
இவர்கள் தங்கவைத்துள்ள இடமானது எந்தவித வசதிகளும் இன்றி காணப்படுவதோடு தாய் சேய் பார்த்துக்கொள்ள முடியாதவாறு வெகுதூரத்தில் அமைந்துள்ளது.
அவசர தேவை ஏற்படும்போது நோயாளியை பராமரிப்பதற்குரிய எந்தவித உபகரண வசதிகளும் அங்கு இல்லை. குடிநீர் வசதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை.
பல தொண்டு நிறுவனங்கள் கொரோனா நோயாளர்களிற்கு என வழங்கிய ஏராளமான உபகரணங்கள் வேறு விடுதிகளில் பதுக்கப்பட்டுள்ளனவா அல்லது பின் பாதையால் சென்றுவிட்டனவா என எண்ண தோன்றுகின்றது.
இன மத பேதம் பார்க்கும் வைத்திய நிபுணர் ஒருவரினால் குறித்த தமிழ், முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் கர்ப்பத்திற்கு பின்னர் ஏற்படும் மன அழுத்த நோய்க்கு அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதனால் இன்னும் PCR பரிசோதனை மேற்கொள்ளவில்லை , வேண்டும் என்றே எங்களை ப ழி வாங்குகின்றனர் என்ற மனவிரக்தியில் சில நோயாளிகள் த ற் கொ லை க்கு முயன்று ள்ளதாகவும் தெரிய வருகின்றது.
அண்மையில் தாதியர்கள் பலர் கொரோனா தொற்றிற்கு உள்ளான நிலையில் சிங்கள தாதி ஒருவரிற்கு மேலதிக பரிசோதனைகள் செய்து அவரை தனிமைப்படுத்தலிற்கு அனுப்புவதை தடுத்ததாகவும், ஏனைய தாதியர்களையும்,
தொற்று உறுதிப்படுத்தாத தாதியர்கள் சிலரையும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பியதாகவும் முறைப்பாட ஒன்று கிடைத்திருந்தது.
தற்போது அந்த தாதிக்கு 24 மணிநேர ஓய்வு வசதியுடன் தொலைபேசி பாவனைக்கு அனுமதி வழங்கப்பட்டு பல போதுமக்கள் வந்து செல்லும் இடத்தில் பணி என இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவர் எந்த நேரமும் தொலைபேசியில் வீடியோ பார்ப்பதும் வீடியோ காலில் அரட்டை அடிப்பதும் என காலத்தை போக்குவதாகவும் இதனை பலர் அவதானித்து முறைப்பாடு அளித்தும் பலன் இல்லை எனவும் தெரியவருகின்றது.
பொது இடங்களில் இவ்வாறான செயற்பாட்டினால் திட்டமிட்டு எல்லா தாதியர்களும் இவ்வாறுதான் என குறித்த வைத்திய நிபுணர் முத்திரை குத்த முயல்வதாக ஏனைய தாதியர்கள் விசனம் தொரிவித்துள்ளனர்.
முக்கியமான பணியில் இருக்கும் குறித்த வைத்திய நிபுணர் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வைத்தியசாலைக்குள் தலை காட்டுவதாகவும் ஏனைய நாட்களில் தலைமறைவாகி விடுவதாகவும் தெரியவருகின்றது.
இதனால் பல நோயாளர்களின் பராமரிப்பு தொலைபேசியிலேயே இடம்பெறுவதாகவும் தெரியவருகின்றது.
எனவே வைத்தியசாலை நிர்வாகம் அதில் உள்ள சிக்கல்களைக் களைந்து PCR இயந்திரத்தினை உடனடியாக மீள இயக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.