உயிரிழந்ததாக தெரிவித்து, பிரேத அறை க்கு அனுப்பப்பட்ட நபரொருவர், உயிருடன் இருந்த சம்பவம் ஒன்று நீர்கொழும்பு பொது வைத்தியசாலை யில் பதிவாகியுள்ளது.
மீனவ சமூகத்தைச் சேர்ந்த 40 வயதான ஒருவர் உயிரிழந்ததாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த நபரின் சடலம் பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபரின் சடலத்தை பார்வையிடுவதற்காக, அவரது குடும்பத்தார் பிரேத அறை க்கு சென்று, நபரை கட்டி பிடித்து அழுத வேளையில் அவர் உயிருடன் உள்ளதை, உறவினர்கள் அவதானித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, குறித்த நபர் மீண்டும் வாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரின் உடலில் சீனியின் அளவு குறைவடைந்தமையினால், அவர் சுயநினைவை இழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்திய வைத்தியருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை யை எடுக்க வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரபல இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையோ பொலிஸ் நிலையமோ இதுவரையில் அதிகாரபூர்வமாக எவ்வித அறிவித்தல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .