12.5 கிலோக லாப் சமையல் எரிவாயு சிலிண்டரை 1,856 ரூபாவுக்கும் 5 கிலோ கிராம் எடையுள்ள சிலிண்டலை 743 ரூபாவுக்கும் விற்பனை செய்ய நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. லிட்ரோ ரக சமையல் எரிவாயுவின் விற்பனை விலையை தற்போதைய விலைக்கு அமைய பேணுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பால்மாவின் விற்பனை விலையை அதிகரிக்குமாறு பால்மா இறக்குமதி நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள் என கூட்டுறவு சேவைகள், சந்தை மேம்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
வர்த்தகத்துறை அமைச்சிர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சந்தையில் தற்போது பால்மா மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அரசாங்கத்தின் பலவீனமான முகாமைத்துவத்தினால் இவ்வாறான பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது என குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
கொவிட் -19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக இவ்விரு பொருட்களின் விலை உலக சந்தையில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே நிறுவனத்தினர் விலை அதிகரிப்பு குறித்து கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள் என்றார்.