Home Local news அஹ்னாப் ஜஸீம் விவகாரம் : பிணைக்கு எதிர்ப்பில்லை என நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு!

அஹ்னாப் ஜஸீம் விவகாரம் : பிணைக்கு எதிர்ப்பில்லை என நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு!

நவரசம் என்ற கவிதைத் தொகுப்பு நூலை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பிணையளிக்க எதிர்ப்புக்களை முன்வைக்கப் போவதில்லை என உயர் நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் நேற்று அறிவித்தார்.

அஹ்னாபின் கைதும் தடுப்புக் காவலும் சட்டவிரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்ப்ட்டுள்ள எஸ்.சி.எப்.ஆர். ஏ 114/ 21 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று (8) பரிசீலனைக்கு வந்தபோது, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் குறித்த மனு மீதான பரிசீலனைகள் உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துறைராஜா தலைமையிலான குமுதினி விக்ரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது, மனுதாரரான அஹ்னாப் ஜஸீம் சார்பில் நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.எம். இல்யாஸ், சட்டத்தரணிகளான சஞ்சய வில்சன் ஜயசேகர, லக்ஷ்மனன் ஜயகுமார்,ஸ்வஸ்திகா அருலிங்கள் தரிந்து ரத்நாயக்க ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கணக ஈஸ்வரன் ஆஜரானார்.

இதன்போது மனுவின் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே, அஹ்னாப் ஜஸீமுக்கு புத்தளம் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல்ச் செய்யப்ப்ட்டுள்ள நிலையில், அங்கு முன் வைக்கப்பட்டுள்ள பிணை கோரிக்கைக்கு சட்ட மா அதிபர் எதிர்ப்புகளை முன் வைக்க போவதில்லை என தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார். அந்த வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி அங்கு விசாரணைக்கு வருவதாகவும் அவர் கூறினார்.

READ MORE >>>  மின் பாவனையாளர்களுக்கான சலுகை அறிவிப்பு!

இந்நிலையில் அஹ்னாப் ஜஸீமுக்காக நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கணக ஈஸ்வரன், சட்ட மா அதிபரின் குறித்த நிலைப்பாட்டை வரவேற்றார். அத்துடன் வழக்கை முன்னெடுத்து செல்ல தயாராக இருப்பதாகவும் அதற்காக மேல் நீதிமன்றின் பிணை உத்தரவு பரிசீலிக்கபப்டும் நாளுக்கு பின்னரான திகதி ஒன்றை தெரிவு செய்வது சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், சட்ட மா அதிபர் எதிர்வரும் 15 ஆம் திகதி புத்தளம் மேல் நீதிமன்றில், அஹ்னாப் ஜஸீம் தொடர்பிலான வழக்கில் பிணை கோரிக்கையை எதிர்ப்பதில்லை என உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்லதாக நீதியரசர்கள் பதிவு செய்தனர்.

அத்துடன் அது தொடர்பில் ஏதும் சிக்கல் இருப்பின், உடனடியாக உயர் நீதிமன்றுக்கு நகர்த்தல் பத்திரம் ஊடாக அறிவிக்க முடியும் எனவும் நீதியரசர்கள் மனுதாரர்களுக்கு அரிவித்தனர். இந்நிலையில் மனுதாரர்கள் கோரியுள்ள வழக்கை விசாரணைக்கு ஏற்பது மற்றும் இடைக்கால நிவாரணம் தொடர்பிலான விடயங்களை தீர்மானிக்க வழக்கானது எதிர்வரும் 2022 மார்ச் 8 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அஹ்னாப் ஜஸீமுக்கு மேல் நீதிமன்றில் பிணை வழங்கப்படுமாக இருந்தால், அவசர விடயமாக அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிக்க வேண்டி வராது என்பதால் உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்மானித்தது.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் பாதுகாப்பு செயலர் கமல் குணரத்ன, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன டி அல்விஸ், குறித்த பிரிவின் வவுனியா கிளை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.கே.ஜே. அனுரசாந்த, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

READ MORE >>>  அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்க்க இணக்கம்!

தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில் 26 வயதான கவிஞர் அஹ்னாப், கவிஞராகவும் ஆசிரியராகவும் செயற்படுவதாகவும் அவர், பேருவலை ஜாமியா நளீமியா கலாபீடத்தில் தனது கல்வியை நிறைவு செய்துள்ளதாகவும் மனுதாரர் சார்பில் குறிப்பிடப்ப்ட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2020 மே 16 அம் திகதி இரவு 8 மணியளவில், சிலாவத்துறை , பண்டாரவெளியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து 4 ஆம் பிரதிவாதியான வவுனியா ரிஐடி கிளை பொறுப்பதிகாரியினால் கைது செய்யப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதன்போது அவரது வீட்டிலிருந்து 50க்கும் அதிகமான நவரசம் கவிதை தொகுப்பு நூல்களும் மேலும் சில புத்தகங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலில் கோட்டை நீதிமன்றில் உள்ள பீ 13101/19 வழக்கு தொடர்பில் அஹ்னாப் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், கடந்த மார்ச் 3 ஆம் திகதி பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கோட்டை நீதிமன்றின் குறித்த வழக்கில் அஹ்னாப் சந்தேக நபரில்லை என நீதிமன்றில் அறிவித்திருந்தார்.

எனினும் அவருக்கு எதிராக புதுக் கடை நீதிவான் நீதிமன்றில் உள்ள வழக்கொன்று தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்வதாக பிரசாந்த ரத்னாயக்க எனும் ரி.ஐ.டி.யின் உப பொலிஸ் பரிசோதகர் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது. என மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னாப், தடுப்புக் காவலில் பெரும்பாலான நேரங்களில் கை விலங்கிட்டே வைக்கப்பட்டுள்ளதாகவும், நித்திரைக்கு செல்லும் நேரம் கூட அவ்வாறன நிலையிலேயே அவர் வைக்கப்ப்ட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

READ MORE >>>  இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

அத்துடன் கைது செய்யப்படும் போது கூறப்பட்ட காரணத்தை விட, தற்போது, பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்தில் அடிப்படைவாதம் போதனை செய்யப்பட்டதாக ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்றை வழங்குமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அஹ்னாபை சித்திரவதை செய்வதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்புக் காவலில் உள்ள அஹ்னாபை அங்கு எலி கடித்துள்ளதாகவும் அவருக்கு முறையான சிகிச்சைகள் கூட அளிக்கப்படவில்லை என அம்மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு நீதிவான் நீதிமன்றில் உள்ள பீ 44230/8/20 எனும் வழக்கில் தனக்கு எதிரகவே ஒப்புதல் வாக்குமூலம் வழங்க அஹ்னாப் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் , அஹ்னாபின் தந்தையிடம், ஜாமியா நளிமீயா கலாபீடத்தில் அடிப்படைவாதம் போதிக்கப்பட்டதாக வாக்குமூலம் வழங்க அஹ்னாபை சம்மதிக்க வைக்குமாறு பேசியதாகவும், அவ்வாறு வாக்குமூலம் அளித்தால் சிறிது நாட்களில் அவரை விடுவிக்க முடியும் என கூறியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அஹ்னாபை அவரது சட்டத்தரணிகள் பார்வையிட முதலில் அனுமதிக்கப்படாத நிலையில், பின்னர் வழங்கப்பட்ட அனுமதியின்போது சட்டத்தரணியுடன் அவர் உரையாடுவதை ரி.ஐ.டி. அதிகாரிகள் ஒலிப்பதிவு செய்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அஹ்னாபின் தடுப்புக் காவலுக்கு எதிராக இடைக்கால தடை விதித்து அவரை உடனடியாக விடுவிக்கவும், மனுவை விசாரணை செய்து நட்ட ஈடாக 100 மில்லியன் ரூபாவைப் பெற்றுத் தருமாறும் மனுதாரர் சார்பில் உயர் நீதிமன்றிடம் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவூடாக கோரப்பட்டுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleவாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது
Next articleயாழ் பேருந்து பயணிகளுக்கான அறிவித்தல்