Home Local news இந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவும், திருகோணமலையும், வல்லரசுகளும்

இந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவும், திருகோணமலையும், வல்லரசுகளும்

more news

திருகோணமலையில் அமெரிக்காவிற்குப் பெரிய அளவிலான நிலப்பரப்பு வழங்கப்பட்டுவிட்டது, அங்கு அமெரிக்கத் தளம் உருவாக்கப்படுகிறது எனக் கடந்த மாதம் முழுவதும் பலதரப்பட்ட செய்திகளை சமூக வலைத்தளங்களும், ஊடகங்களும் தத்தம் அறிவுசார் நிலையிலிருந்து வெளியிட்டன.

இந்தப் பின்னணியில் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கின்ற கொதிநிலையும், இந்தியா – அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்திற்கும், சீனாவுக்கும் இடையிலான அரசியல், இராணுவ, பொருளியல் பலப்பரீட்சையில் இலங்கைத் தீவு பரீட்சைக் களமாக மாறியிருக்கிறது.

அந்தப் பரீட்சை களத்தில் ஈழத் தமிழர் பிரச்சினை முக்கிய புள்ளியாக உருப்பெறத் தொடங்கிவிட்டது என கட்டுரையாளர் திபாகரன் தனது கட்டுயைில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறித்த கட்டுரையில் மேலும் குறிப்பிடுகையில்,

திருகோணமலையில் அமெரிக்காவுக்கு ஒரு துண்டு நிலப்பரப்பையேனும் இந்த நிமிடம் வரை இலங்கை அரசு வழங்கவில்லை என்பதுதான் உண்மையானது. ஆனால் அதற்கான பேரம் பேசல் இடம்பெற்றிருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

இன்றைய இந்தோ – பசுபிக் பிராந்திய கொதிநிலையில் இலங்கை தீவில் ஒரு தளம் அமெரிக்காவுக்குத் தேவையாகவுள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை.

ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு வலையத்தினுள் உள்ள ஒரு புள்ளியாகவே இலங்கைத் தீவு எப்போதுமுள்ளது. அத்தகைய இலங்கை இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் இருந்து தாவிப் பாய்ந்து வெளியே நிற்பதோடு மாத்திரமல்ல அது சீனாவுடன் கூட்டுச்சேர்ந்தும் நிற்கிறது.

இந்த நிலையில் இந்தியாவின் பாதுகாப்பு வலையத்துக்குள் இருக்கக்கூடிய இலங்கைத் தீவினுள்ளே இன்னுமொரு வல்லரசு வந்து நிலைகொள்வதை இந்தியாவினால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்பது கவனத்துக்குரியது. ஏனைய நாடுகளுக்கு இந்து சமுத்திரமானது உலகில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சமுத்திரங்களில் ஒன்று மட்டுமே.

ஆனால் இந்தியாவிற்கு இந்து சமுத்திரம்தான் அதன் உயிர்நாடியாகும். இந்தியாவின் உயிர் வாழ்வும், சுதந்திரமும் இந்நீர்ப்பரப்பின் பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது.

இந்து சமுத்திர நீர்ப்பரப்பு பாதுகாக்கப்படாமல் இந்தியாவிற்குத் தொழில் விருத்தியுமில்லை, வர்த்தக வளர்ச்சியுமில்லை, ஸ்திரமான அரசியல் அடித்தளமுமில்லை என இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கே.எம்.பணிக்கர் குறிப்பிட்டது எக்காலத்திற்கும் இந்தியாவுக்குப் பொருத்தமானதே.

இந்தோ – பசுபிக் கடற் பிராந்தியத்தில் மேற்குலகிற்கும் சீனாவுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி இன்று உச்சம் பெற்றுவிட்டது.

இந்து சமுத்திரத்தின் மையப்பகுதியில் உள்ள இலங்கைத்தீவும், இந்தியாவும் இந்த அதிகாரப் போட்டியில் முக்கிய கேந்திர ஸ்தானத்தில் உள்ளன.

எனவே வரலாற்று ரீதியாக இந்தோ – பசுபிக் பிராந்திய கடலாதிக்க வலுச்சமநிலையையும் அதன் பின்னணியையும் நோக்குவது அவசியமானது. உலகின் முதலாவது கடலாதிக்கப் பேரரசு சோழப் பேரரசாகும்.

10ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரையான ஏறக்குறைய 400 ஆண்டுகள் இந்து – பசுபிக் சமுத்திரப் பகுதிகளிலுள்ள வங்கக்கடலிலும் (தமிழன் கடல்), தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளிலும், அரேபியக் கடலிலும் சோழர்களின் கடற்படையும், சோழர் கணங்களும் (வர்த்தக கம்பனிகள்) ஏக செல்வாக்குச் செலுத்தின.

சோழர்கள்தான் முதன் முதலில் கடல் கடந்து படையெடுத்துச் சென்று தென்கிழக்கு ஆசியாவில் ஸ்ரீ விஜயா சாம்பிராஜ்சம் என்ற ஒரு அரசை ஸ்தாபித்தார்கள்.

இதன்மூலம் கடல்கடந்து பேரரசுகளை உருவாக்கலாம் என்பதை உலகிற்கு முதலாவதாகச் செய்து காட்டியவர்கள் சோழர்கள். உலகின் முதலாவது கடற்படையும் சோழர்களதே.

சோழர்களின் கடல் வீரர்களைச் சுமந்துகொண்டு தொடராக இந்தோ – பசுபிக் கடலில் உலாவந்த கடற்கலங்களுக்கு நாவாய் என அன்று அழைத்தனர்.

இன்று ஆங்கிலத்தில் கடற்படைக்கு நேவி (NAVY) என்ற சொல் நாவாய் என்ற வேர்ச்சொல்லில் இருந்தே தோன்றியது.

READ MORE >>>  தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு

சோழர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வகுத்ததுக் கைக்கொண்ட கடல்சார் கொள்கையைத்தான் இன்று அமெரிக்கா இந்தோ – பசுபிக் கோட்பாடு என தமது நலன்சார்ந்து மீண்டும் புது வடிவம் கொடுத்திருக்கின்றது என்பது கவனிக்கத்தக்கது. சோழருடைய கடல் ஆதிக்க கொள்கைதான் இன்றை நவீன இந்தியாவுக்குப் பொருத்தமானது.

இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கு, மேற்கு கடற்கரை முழுவதும் சோழர் கட்டுப்பாட்டிலேயே அன்று இருந்தன. சோழருடைய கடல் ஆதிக்க கொள்கையை உற்று அவதானித்தால் மேற்குறிப்பிட்ட இலங்கைத்தீவின் தமிழர் பிரதேசம் சோழர்களின் கடல் ஆதிக்க கடற்கொள்கையின் வியூகத்தில் இணைவது புரியும்.

சோழர்களின் கடல் ஆதிக்கம் வீழ்ச்சி அடைகின்றபோது 13ம் நூற்றாண்டுக்குப் பின்னர் 14ம்,15ம் ஆம் நூற்றாண்டு வரை அரேபியர்களின் கைகளில் இந்து சமுத்திர ஆதிக்கம் சென்றது.

அவர்கள் தமிழன் கடலான வங்கக் கடலை கடந்து தென்கிழக்காசிய வரை வர்த்தகம் செய்து ஆதிக்கம் செலுத்தியதோடு மாத்திரமல்ல தென்கிழக்காசியாவில் மலேசியா, இந்தோனேசியா என்ற இரண்டு பெரும் இஸ்லாமிய நாடுகளைக் கட்டமைப்புச் செய்துவிட்டார்கள்.

சோழர்களாகிய தென்னிந்தியர்களின் கடல் வலிமை குன்றியபோது இத்தகைய பெரும் மாற்றம் நிகழ்ந்து இருக்கின்றது என்பதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

சோழர்களின் கடற்படையும், கடற்கொள்கையும் தொடர்ந்து நடைமுறையில் இருந்திருந்தால் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் இஸ்லாமிய எழுச்சி ஏற்படுவதற்கான எந்த வாய்ப்பும் இருந்திருக்காது. 15ம் நூற்றாண்டில் சீனர்கள் இந்தியப்பெருங்கடலில் பெரும் கடற்படையுடன் உள்நுழையத் தொடங்கினர்.

இந்து சமுத்திரத்தில் இலகைத்தீவிற்கு கி.பி 1407-1419 களில் நான்கு தடவைகள் சீன கடற்படைத்தளபதி அட்மிரல் ஷென் – ஹி (Admiral Zheng-he) 440 அடி நீளமும் 180 அடி அகலமும் கொண்ட பாரிய 62 கப்பல்களில் 37000 சீன வீரர்களுடன் வந்தான்.

இலங்கைத்தீவில் முதலாவது துப்பாக்கி பிரயோகத்தைச் செய்தவனும் ஷென் -ஹிதான். அவன் கொழும்பு கோட்டை இராச்சியத்தைக் கைப்பற்றி (1409-1411) மூன்று ஆண்டுகள் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்துவிட்டு சென்று விட்டான்.

16ம் நூற்றாண்டில் போத்துக்கேயரும், ஒல்லாந்தரும்,தொடர்ந்து ஆங்கிலேயரும் இந்து சமுத்திரத்தினுள் நுழைந்து இப்பிராந்திய நாடுகளை தமது காலனிய ஏகாதிபத்தியத்தின்கீழ் கொண்டுவந்தனர்.

18ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் எழுர்ச்சி பெற்ற நெப்போலியன் இலங்கைத்தீவின் திருகோணமலையைக் கைப்பற்றிவிட்டால் இந்த உலகை நான் ஆழ்வேன் எனக் குறிப்பிட்டமை திருகோணமலையின் உலகளாவிய முக்கியத்துவமும் கேந்திர ஸ்தானமும் ஆழ்ந்து கவனிக்கத்தக்கது.

ஆனால் இன்று 600 ஆண்டுகளின் பின் சீனா மீண்டும் தனது ஆளுகையை இலங்கைமீதும், இந்து சமுத்திரத்தின் மீதும் செலுத்த முற்படுகிறது. 1965ஆம் ஆண்டிலிருந்து இந்து சமுத்திரத்தின் தென் பகுதியிலுள்ள டியாக்காகோசியா தீவில் உள்ள அமெரிக்கத் தளத்திலிருந்து இந்து சமுத்திரத்தை முழுமையாக அமெரிக்காவினால் கண்காணிக்கக் கூடிய இருந்தது.

ஆனால் இன்று இந்து சமுத்திரத்தின் வடபகுதியில் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம், இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம், மியார்மாவின் கொக்கோ தீவிலும் சீனா நிலைகொண்டுவிட்டது.

இதனால் இந்து சமுத்திரத்தின் பிரதான வர்த்தக பாதைகளைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் தற்போது அமெரிக்காவிற்குச் சவால் ஏற்பட்டுள்ளது. இலங்கைத் தீவில் சீனா கால்பதித்து விட்டது. சீனாவை அகற்றுவதற்குரிய இலகுவான வழிகள் ஈழத்தமிழர் மூலமாக உள்ளன.

14 நூற்றாண்டில் இலங்கை தீவின் பெரும்பகுதிக் கடற்கரையோரத்தில் தமிழர்கள்தான் பெரிதும் வாழ்ந்தனர். குறிப்பாக மேற்கு கடற்கரையோரமாகவுள்ள காலி தொடக்கம் புத்தளம் வாரையான கடற்கரையோரத்தில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்களாக இன்று மாறிவிட்டனர். இன்று சிங்கள சமுகத்தில் காணப்படும். கரவா, சலாகம, துரவ, பரைய சாதியினர் 14ம் நுாற்றாண்டின்பின் சிங்களவராக மாற்றப்பட்டுவிட்டனர்.

READ MORE >>>  கழுத்தை அறுப்பதாக சைகை! விடுவிடுத்த நீதிமன்றம்

பனாண்டே,செய்ஸா, சில்வா… போன்ற போத்துக்கேயப் பெயர்கள் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்ட தமிழர்களின் வழித்தோன்றல்களே.

இவ்வாறு மேற்குக் கரையோரத் தமிழர்கள் பௌத்தத்தாலும், சிங்களத்தாலும், கிறிஸ்தவத்தாலும் விழுங்கப்பட்டு விட்டனர். எனினும் இன்றும் ஈழத்தமிழர்கள் இலங்கைத்தீவின் மூன்றில் இரண்டு கடற்பரப்பில் செல்வாக்கு செலுத்தக்கூடிய நிலையிலேயே இன்றும் உள்ளனர்.

வட – கிழக்கு மாகாணத்தின் கடற்கரையோரமாகப் பரந்துவாழும் ஈழத்தமிழினம் அதனுடைய தேசிய அபிலாசைகளைப் பூர்த்தி செய்தால் இலங்கைத் தீவின் மூன்றிலிரண்டு கடற்பகுதி தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

அவ்வாறு தமிழர்களின் கையில் கடல் இருக்குமேயானால் சீனா இலங்கை தீவிலிருந்து முற்று முழுதாக வெளியேற வேண்டியிருக்கும் அல்லது சீனா இலங்கைத்தீவின் சிங்கள தேசத்தினுள் முடக்கப்படும்.

எனவே ஈழத்தமிழர் பிரச்சினை என்பது புதிய உலக அரசியல் ஒழுங்கில் தவிர்க்கமுடியாத கேந்திர தானத்தையும், பங்கையும், பாத்திரத்தையும் வகிக்கப் போகிறது.

சீன – மேற்குலகிற்கு இடையிலான இந்து சமுத்திர ஆதிக்கப் போட்டியில் ஈழத் தமிழர்களுடைய நலன்களும், அவர்களுடைய இருப்பும் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதியும், சமாதானமும், ஜனநாயகமும் நிலவமுடியும். அத்தோடு மேற்குலகிற்கும், இந்தியாவுக்குமான செல்வாக்கிற்கும், பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.

மாறாக அது சிங்கள இனத்துக்குச் சாதகமானதாகச் செயற்பட்டு ஈழத்தமிழர் நலன்கள் சிதைக்கப்பட்டால்! இலங்கைத் தீவு முற்று முழுதாக சீன மாயமாகிவிடும்.

இலங்கைத்தீவு சீன மயமாதலைத் தடுப்பதற்கும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் ஆளுகையைக் கட்டுப்படுத்துவதற்கும் ஈழத்தமிழர்கள் தமது தேசிய அபிலாசைகளை அடைந்தவர்களாக அல்லது விடுதலை பெற்றவர்களாக இருக்க வேண்டியது முக்கிய நிபந்தனையாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்துமாசமுத்திர வலுச்சமநிலை சீனாவுக்குச் சார்பான திசையில் செல்லத் தொடங்கி இருப்பதைக் காணலாம்.

இந்தப் பின்னணியில் இந்து சமுத்திரத்தின் மையப்பகுதியில் அதுவும் ஒரு கேந்திர ஸ்தானத்தில் உள்ள இலங்கைத் தீவின் திருகோணமலைத் துறைமுகத்தை யார் இராணுவரீதியாகக் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்களோ அவர்களினால் இந்து சமுத்திரத்தின் வர்த்தகப் பாதையை தமது பிடிக்குள் வைத்திருக்க முடியும் என்ற யதார்த்தம் உணரப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் ஈழத் தமிழர் இனப் பிரச்சனை சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெறுகிறது. அத்தோடு ஈழத் தமிழரும் தமிழர் தாயகமும் அதன் கேந்திர முக்கியத்துவமும் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு தற்போது இன்னும் ஒரு படி மேல் நோக்கிச் சென்றுள்ளது.

இந்தோ – பசுபிக் பிராந்திய மேற்குலக கூட்டான குவாட் அமைப்பிற்கு இந்தப் பிராந்தியத்தில் இந்தியாதான் தலைமை தாங்க வேண்டும் என்ற நிலை படிப்படியாக அதிகரித்துள்ளது. அதனையே இந்தியாவும் விரும்புகின்றது.

அதற்கான அனைத்து செயல்பாடுகளிலும் இந்தியா மும்முரமாக இறங்கியுள்ளது. இந்தநிலையில் இலங்கை தீவில் மேற்குலகம் சார்ந்து அமெரிக்கா நிலை கொள்வதா? அல்லது மேற்குலகம் சார்ந்த இந்தியா தனது எதிர்கால பாதுகாப்பு ஸ்திரத்தன்மை என்பவற்றைக் கருத்தில் கொண்டு தனது பாதுகாப்பு வலயத்திலுள்ள இலங்கைத்தீவில் தான் நிலை கொள்வதா? என்பதுதான் இங்கே முக்கியமானது.

திருகோணமலையில் அமெரிக்கா நிலை கொள்வதற்கான பேரம் பேசுகையில் இலங்கை அரசுடன் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டால் அது அமெரிக்காவுக்கும் இலங்கைக்குமான நலன்சார்ந்த விடயங்களாகவே அமையும்.

இந்த விவகாரங்களில் இந்தியாவிற்கு எந்த விதமான செல்வாக்கும் பிற்காலத்தில் இல்லாது போய்விடக்கூடிய ஆபத்துண்டு.

READ MORE >>>  ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட 4 பேர் மாட்டினர்

அதே நேரத்தில் இந்து சமுத்திரத்தில் உள்ள இந்தியாவுக்குச் சொந்தமான அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏதாவது ஒரு இடத்தில் அமெரிக்காவுக்கான ஒரு இடத்தை இந்தியா வழங்கினால் அது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளின் அடிப்படையில் கையாளப்படும்.

ஆனால் இந்து சமுத்திரத்தில் இந்தியா தனது நிலையைப் பலப்படுத்த வேண்டுமானால் தனது பாதுகாப்பு வலயத்தில் உள்ள இறையாண்மை கொண்ட இலங்கைத் தீவில் இன்னும் ஒரு வல்லரசை நிலைகொள்ள வைப்பது என்பது இந்தியாவுக்கு எதிர்காலத்தில் பலதரப்பட்ட சவால்களை ஏற்படுத்தும்.

எனவே இந்தியா தன்னுடைய பாதுகாப்பு வலயத்துக்குள் அடங்குகின்ற ஒரு பிரதேசத்தில் தனக்கப்பால் ஒரு வெளி வல்லரசு நிலைகொள்வதை எந்தச் சந்தர்ப்பத்திலும் சகித்துக்கொள்ள மாட்டாது. அத்தகையதொரு நிலை ஏற்படுவதை எந்த வகையிலாவது தடுத்து நிறுத்தவே இந்தியா முற்படும்.

எனவே இலங்கை தீவில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான வல்லரசுகளின் நடவடிக்கைகளையும் தனக்கு ஏற்ற வகையிலேயே வடிவமைக்கவே இந்தியா முயலும்.

ஏனெனில் பனிப்போர் காலத்தில் இந்தியா அமெரிக்காவுக்கு எதிரி நாடாக இருந்தது. அதே நேரத்தில் சீனா அமெரிக்கா சார்ந்ததாக இருந்தது. ஆனால் பனிப்போரின் பின்னர் இந்தியா, அமெரிக்கச் சார்பு நாடாக மாறிவிட்டது.

சீனாவோ, அமெரிக்க எதிர்ப்பு நாடாகத் தன்னை வடிவமைத்துக் கொண்டுவிட்டது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா இருந்த நிலையும், கடந்த முப்பது ஆண்டுகளாக இந்தியா எடுத்திருக்கின்ற நிலையும், அதே நேரத்தில் இன்னும் முப்பது ஆண்டுகளின் பின்னர் இந்தியா எடுக்கக்கூடிய அல்லது அடையக்கூடிய நிலையையும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.

எனவே மாறிவரும் உலக ஒழுங்குக்கு ஏற்றவகையில் எதிர்கால இந்தியாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இலங்கை விவகாரத்தில் இந்தியா தனது கொள்கையை வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பனிப்போர் காலத்தில் இரட்டை மைய உலக அரசியல் நிலை பெற்றது. பனிப்போரின் பின்னான காலத்தில் ஒற்றை மைய உலக அரசியல் அமெரிக்கா தலைமையில் தோன்றியது.

ஆனால் இன்று பலமைய அரசுகள் என்று அறிஞர்களும், அரசியலாளர்களும் கூறிக் கொண்டாலும் பல்முனை என்பது உலகளாவிய வரலாற்று அர்த்தத்தில் ஒருபோதும் சாத்தியமில்லை.

இருமுனைகளுக்கு அடுத்ததாக அமையக்கூடிய மூன்றாவது, நான்காவது அணிகள் இறுதி யார்த்தத்தில் ஏதோ ஒன்றின் பின்னால் தொழிற்படுவதாகவும், ஒரு அணிக்காகச் சேவகம் செய்வதற்காகவே அமைய முடியும்.

ஆகவே உலகளாவிய அரசியலில் இரு முனைகள் மாத்திரமே செயற்பாட்டு நிலைபெறமுடியும் என்பதை மனிதக்குல வரலாறு நிரூபித்திருக்கிறது.

எனவே உலகளாவிய அரசியல் இராணுவ போட்டோ போட்டிகளில் ஏற்படக்கூடிய சாதக பாதக விளைவுகளைக் கருத்தில் கொண்டு தத்தம் நலன் சார்ந்து உலகளாவிய அரசுகள் இரு அணிகளாகப் பிரிந்து நிற்பது தவிர்க்க முடியாது.

இத்தகைய உலகளாவிய அரசியல் போக்குகள் ஆழமாக நோக்கி இந்தியாவும், ஈழத்தமிழரும் தமது அரசியல் நலன்களையும் பாதுகாப்பையும் கருத்திக் கொள்ள வேண்டும்.

எது நடைமுறைக்குச் சாத்தியமானதோ அதுவே சரியானது. நடைமுறைக்குச் சாத்தியமான அணியில் இணைத்து தன்னை தற்காத்துக் கொள்ளும் படி வரலாறு தமிழினத்துக்குக் கட்டளையிடுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleதொற்றுக்குள்ளான தாய் உயிரிழப்பு; சிகிச்சையில் இருக்கும் மகளின் பரிதாபம்!
Next article150 மதுபான போதல்களுடன் ஒருவர் கைது