Home Lifestyle “தமிழ் மக்களின் மனங்களில் ஆறாமல் வடுக்கள் உள்ளமையைப் புரிந்துகொண்டேன்”

“தமிழ் மக்களின் மனங்களில் ஆறாமல் வடுக்கள் உள்ளமையைப் புரிந்துகொண்டேன்”

“தமிழ் மக்களின் மனங்களில் ஆறாமல் வடுக்கள் உள்ளமையைப் புரிந்துகொண்டேன்” -மக்களை நேசிக்கும் சிங்களப்பெண்ணின் இதயம் பேசுகிறது

இலங்கைத் திருநாட்டில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் இலங்கையின் குடிமகன்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் ஒவ்வொரு குடிமகனும் இன மத பேதமின்றி பன்மைத்துவத்துடன் வாழ்கின்றனரா என்றால் அது கேள்விக்குரிய ஒரு விடயமே.

ஆனால் இன்றைய தலைமுறை இதற்கான பதிலை சாதகமானதாக ஆக்கும் முயற்சியில் படிப்படியாக ஈடுபட்டு வருகின்றது என்பது இன்றைய காலகட்டத்தில் அவதானிக்க முடிகின்றது.

இதற்கு சாட்சியாக விளங்குகின்றார் ஷானிகா லக்மாலி.

ஷானிகா லக்மாலி என்றால் யார் என்பது கடந்த ஆண்டு வரை யாருக்கும் தெரியாது இருந்திருக்கலாம்.

ஆனால் 2021 ஆம் ஆண்டு முகநூலை அலங்கரித்த யாழ்ப்பாண பல்கலைக்கழ மாணவி தான் ஷானிகா லக்மாலி.

இதற்கு காரணம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறிய பின்னர் அவரது முகநூலில் அவர் பதிவிட்ட புகைப்படங்கள் இன மத பேதமின்றி

அனைவராலும் பகிரப்பட்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன் அந்தப் புகைப்படங்களுக்கு அதிகளவான விருப்புக்களும் இடப்பட்டிருந்தமையே.

பொதுவாக பல்கலைக்கழக மாணவர்கள் தமது பட்டமளிப்பு விழாவின் பின்னர் புகைப்படங்கள் எடுப்பது வழமை.

அவ்வாறு எடுக்கும் புகைப்படங்களில் தமது பல்கலைக்கழக வாழ்க்கைக் காலத்தில் ஒன்றாகக் கற்ற சக மாணவர்கள் சிரேஸ்ட மாணவர்கள் கனிஸ்ட மாணவர்கள் தமக்கு

கற்பித்த விரிவுரையாளர்கள் தமது பெற்றோர் என சிலருடன் புகைப்படங்கள் காணொளிகள் எடுத்து அதனை முகநூலில் பகிர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது வழமை.

ஆனால் இந்த ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பட்மளிப்பு விழாவின் பின்னர் ஷானிகா லக்மாலி என்ற சிங்கள மாணவி முகநூலில் பதிவேற்றியிருந்த புகைப்படங்கள் வித்தியாசமான முறையில் இருந்ததுடன் அனைவரதும் கவனத்தைப் பெற்றிருந்தன.

அவர் சற்று வித்தியாசமாக தனது பல்கலைக்கழக காலத்தில் தனது கற்றல் நடவடிக்கை உட்பட 4 நான்கு ஆண்டு காலங்களில் தனக்கு யார் யார் நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவினார்களோ அவர்களுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்தது மாத்திரமன்றி அவர்களுக்கு தான் மிகவும் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் பதிவொன்றை இட்டிருந்தார்.

அவரது இந்தப் பதிவு அனைவராலும் பகிரப்பட்டு பாராட்டப்பட்டது. அப்போது தான் யார் இந்த ஷானிகா லக்மாலி என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது.

யார் இந்த ஷானிக்கா லக்மாலி

இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்ட சிங்கள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பெண். அப்பா அம்மா சகோதரன் சகோதரி என உறவுகளைக் கொண்ட அழகிய குடும்பம்.

எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்று 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞான பீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டு அங்கு விலங்கியல் துறையில் தனது பட்டப்படிப்பை நிறைவுசெய்துள்ளார்.

அதுமாத்திரமன்றி 2019 – 2020 காலப்பகுதியில் அதே பீடத்தில் பயிற்றுவிப்பாளராக (Temporary demonstrator) விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். தற்போது கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பைத் தொடருகின்றார்.

ஷானிக்காவின் யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்க்கைக் காலம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் என்பதில் மிகவும் பெருமைப்படுவதாகத் தெரிவிக்கும் ஷானிகா அங்கு கல்வி கற்ற காலப்பகுதி தனது வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத மிக பெறுமதியான காலம் என்கிறார்.

2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன். அந்தக் காலப்பகுதியில் பல்கலைக்கழக மாணவர் விடுதியிலேயே தங்கியிருந்தேன்.

READ MORE >>>  ஊரடங்கு தொடர்பில் சுகாதார அமைச்சர் சற்றுமுன் அறிவிப்பு!

இதன்போது அங்கு பல விதமான சவால்களை எதிர்கொண்ட அதேவேளை பல அனுபவங்களையும் பெற்றுக்கொண்டேன். மொழியே எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

ஏனெனில் எனது வாழ்க்கையில் தமிழ் மொழியையோ அல்லது ஆங்கில மொழியையோ முன்னர் பயன்படுத்தியதில்லை. அதிலும் தமிழ் மொழியை கொஞ்சமும் பயன்படுத்தியதில்லை. அதனால் நாங்கள் புதிய மொழியில் உரையாட வேண்டியிருந்தது.

எமது மாணவர் அணியில் இலங்கையின் பல மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இருந்தனர். அவர்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசும் மாணவர்களாக இருந்தனர். அதிகளவாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பேசுபவர்கள் இருந்தார்கள்.

புதிய கலாசாரம் புதிய அனுபவம் புதிய சமூகம் புது வகையான உணவுகள் என்று எமக்கு அனைத்தும் புதிதாகவே இருந்தன. எங்களது மாணவர் விடுதியில் நாங்கள் தமிழ் சிங்களவர்கள் முஸ்லிம் என்று அனைவரும் ஒன்றாகவே இருந்தோம். நான் எனது மருத்துவ தேவை காரணமாக 4 வருடங்களும் ஆனந்த குமாரசுவாமி மாணவர் விடுதியில் இருந்தேன். அதனால் எனக்கு அதிகளவான தமிழ் நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் இன்றுவரை என்னுடன் மிக அன்பாகவும் நட்பாகவும் இருக்கின்றார்கள்.

அந்த 4 வருடங்களில் நாங்கள் அனைவற்றையும் பகிர்ந்துகொண்டோம். குறிப்பாக ஒருவருக்கொருவர் எமது சகோதர மொழிகளைப் புரிந்துகொண்டோம் கற்றுக்கொண்டோம். நான் அவர்களது வீடுகளுக்குப் போனேன். அவர்கள் எனது வீட்டுக்கு வந்தார்கள். அவ்வாறு எங்களது நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து மிக நெருக்கமானது. தற்போது நாங்கள் தமிழர்கள் சிங்களவர்கள் என்று எந்தவித வேறுபாடுமின்றி நெருக்கமாகிவிட்டோம்.

எமது 1 ஆம் 2 ஆம் மற்றும் இறுதி ஆண்டுகளில் மாணவ முதல்வராக இருந்தேன். அதனால் அனைவரையும் சமமாக நடத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. நான் அதனை சரியாக நிறைவேற்றினேன் என்று நினைக்கின்றேன். அதனை நான் பெருமையாக நினைக்கின்றேன்.

அத்துடன் நான் எனது அன்புக்குரிய விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக கல்வி சார் ஊழியர்கள் கல்வி சாரா ஊழியர்கள் கடை முதலாளிகள் யாழ்ப்பாணத்து தமிழ் மக்கள் என அனைவரையும் நன்றியுடன் நினைக்கின்றேன். அவர்கள் அனைவரும் எனக்கு மிக உதவியாக இருந்தார்கள். அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

எனது பல்கலைக்கழக வாழ்க்கையை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன். ஏனெனில் எனது கற்றல் மற்றும் மேலதிக செயற்பாடுகளை வெற்றிகரமாக முடித்துள்ளேன்.

ஷானிக்காவின் யாழ்ப்பாணத்தைப் பற்றிய எண்ணம்

நான் முதன்முதலாக 2009 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்குப் போனேன். அதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தை தொலைக்காட்சி செய்தியில் தான் பார்த்தேன். அந்த நேரத்தில் நான் யாழ்ப்பாணம் போவதற்கு ஆசைப்பட்டேன். பின்னர் எனக்கு ஒரு அதிஸ்டமான சம்பவம் நடந்தது. நான் ஆச்சரியமடைந்தேன்.

அது நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டது தான். ஏனெனில் எனது கனவு நிஜமாகி விட்டது. யாழ்ப்பாண மக்களுடன் பழகுவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது என்று எண்ணினேன்.

யாழ்ப்பாணம் ஒரு சுதந்திரமான நகரம். அங்கு போன பின்னர் நான் யாழ்ப்பாணத்துப் பெண்ணாக ஆகிவிட்டேன். முழு யாழ்ப்பாணத்தையும் சுற்றிவருவதற்கு எனது துவிச்சக்கரவண்டியைப் பயன்படுத்தினேன். கோவிலில் வழிபாடு செய்தேன்.

நான் தமிழ்ப் பெண்களைப் போன்று பொட்டு வைத்து தமிழ் பெண்கள் போன்று அவர்களது கலாசார ஆடைகளை அணிந்தேன். யாழ்ப்பாணத்து பாரம்பரிய உணவு வகைகளை விரும்பி உண்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் எனது வாழ்க்கையை மிக சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் அனுபவித்தேன் என்பதே உண்மை. அங்கு எடுத்த புகைப்படங்கள் எனக்கு ஞாபகச் சின்னங்களாக இருக்கின்றன. ஏனெனில் நான் எப்போதும் நம்புவது நாம் இறக்கும் போது ஞாபகங்களுடன் இறக்க வேண்டுமே தவிர கனவுகளுடன் அல்ல என்பது.

READ MORE >>>  இளைஞர்களைத் தாக்கி,சித்திரவதை புரிந்த 4 பெண்கள் உட்பட ஐவர் கைது ! யாழில் சம்பவம்

தமிழ் பேசும் மக்கள் பற்றி ஷானிகாவின் கருத்து

நான் மனிதநேயம் என்ற ஒரு விடயத்தை மாத்திரமே விரும்புகிறேன். நான் ஒருபோதும் இனம் மதம் சாதி ஏழை பணக்காரன் கறுப்பு அல்லது வெள்ளை என்று எந்த ஒரு பேறுபாடும் பார்ப்பதில்லை. நாம் அனைவரும் மனிதர்கள். எனவே தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லிம்கள் என்று கூட அழைப்பதற்கு நான் விரும்பவில்லை. நாம் ஏன் தனித்தனியாக அழைக்க வேண்டும்?

எமக்கு மொழி தான் ஒரே ஒரு தடையாக உள்ளது. ஆனால் நான் அனைவரையும் ஒரே மாதிரியாக நேசிக்கும்போது மொழி கூட ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. நான் அனைவரையும் நேசிக்கிறேன், எந்தவொரு வித்தியாசமும் இல்லாமல் அனைவரிடமிருந்தும் நேசிக்கப்படுவதால் இந்த உலகில் நான் அதிர்ஷ்டசாலி பெண் என்று நினைக்கிறேன். யாழ்ப்பாண மக்களிடமிருந்து எனக்கு கிடைத்த விலைமதிப்பற்ற விடயம் அது.

மக்கள் தமிழ் பேசும் போது மக்களைப் பார்க்கும்போது, ​​எனக்கு அது பிடிக்கும். ஏனென்றால் மனிதர்களால் மட்டுமே ஒருவருக்கொருவர் புன்னகைக்கவும், பேசவும், புரிந்து கொள்ளவும் முடியும். எனவே நாம் ஏன் அமைதியாக இருக்க வேண்டும். அனைவருக்கும் நம் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்த வேண்டும்.

யாழ்ப்பாண மக்கள் என்னை மட்டுமல்ல, நம் அனைவரையும் மிகவும் நேசிக்கிறார்கள் என்பதை நான் அனுபவித்தேன். அவர்கள் அதிகம் அக்கறை காட்டினர். இப்போது கூட தினமும் அவர்கள் என்னுடன் தொலைபேசி ஊடாக பேசுகின்றார்கள். என்னைத் தங்களது உறவாக நினைக்கின்றார்கள்.

நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது மாத்திரமன்றி அங்கிருந்து வந்த பின்னரும் அந்த அன்பு எனக்கு கிடைக்கின்றமை எனது அதிஸ்டமாகவே கருதுகின்றேன்.

தமிழ் மாணவர்களுடன் பழகிய பின் கிடைத்த புதிய அனுபவங்கள்

பல்கலைக்கழக காலத்தின் போது நாட்டின் அனைத்து இடங்களையும் சேர்ந்தவர்கள் எனக்கு நண்பர்கள் ஆனார்கள். நான் அவர்களின் வீடுகளுக்குச் சென்றேன் அங்கு அவர்களின் குடும்ப உறவு போன்று நடத்தப்பட்டேன்.

இந்தக் காலத்தில் தான் நான் தமிழ் கற்றுக்கொண்டது மாத்திரமன்றி க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி சி தர சித்தியும் பெற்றேன்.

இது மாத்திரமன்றி பல கலாசார, சமூக அனுபவங்களை நான் அனுபவித்தேன். தமிழ் கலாசார உணவுகளை எப்படி சமைக்க வேண்டும்? கலாசார ஆடைகளை எப்படி அணிய வேண்டும்? அவற்றின் பின்னால் உள்ள அர்த்தங்களுடன் அவர்கள் கொண்டாடும் விழாக்கள் மற்றும் திருவிழாக்கள் என்னவென்று அறிந்துகொண்டேன்.

இவை ஒரு புறம் இருக்க கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக போரால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் மனங்களில் ஆறாமல் உள்ள வடுக்கள் என்ன என்பதை நேரடியாக அறிந்துகொண்டேன். இதுபோன்ற மோசமான சூழ்நிலைகளை நாம் மீண்டும் எதிர்கொள்ளக்கூடாது. அவர்களும் எங்கள் உறவுகள் நாம் அனைவரும் ஒரே இலங்கையர்கள்.

பட்டமளிப்பு விழாவுக்குப் பிறகு நீங்கள் FB இல் பதிவேற்றிய புகைப்படங்கள் மிகவும் பாராட்டப்பட்டன, அது குறித்து உங்கள் கருத்து என்ன?

READ MORE >>>  யாழ் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மீது தாக்குதல்

எனது பட்டப்படிப்பை வாழ்த்திய அனைவருக்கும் நான் மிகவும் நன்றி கூறுகின்றேன். புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுப்பது எனது இயல்பு. எது நல்லது என்று நான் நினைத்தாலும் அதை நான் ஒருபோதும் இழக்க மாட்டேன், அதைப் படம் பிடிப்பேன். ஒரு முறை புகைப்படம் எடுத்தால் நான் எந்த புகைப்படங்களையும் அழிக்க மாட்டேன். ஏனென்றால் எல்லோரும் என்னைச் சுற்றி புன்னகைக்கிறார்கள். எல்லோரும் புகைப்படங்களை எடுக்கும்போது சிரிப்பார்கள் என்று நினைக்கிறேன். அது எனது மனதுக்கு நிறைவான ஒரு பொழுதுபோக்கு.

ஆனால் எனது அந்த சிறிய செயற்பாடு ஏன் அனைவராலும் பாராட்டப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. நான் எப்போதும் மதிக்கும் யாழ்ப்பாண மக்களின் தாழ்மையான அணுகுமுறைகள் அதுதான். இது பட்டமளிப்பு நாள் அல்லது சாதாரண நாள் என்றாலும், கடந்த 5-6 ஆண்டுகளாக என்னுடன் இருந்த யாழ்ப்பாணத்தில் உள்ள எனது மிகவும் பிரியமான மக்களுக்கு எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிக்க விரும்பினேன்.

என்னுடன் இருந்த ஒவ்வொருவரது பெயர்களையும் குறிப்பிடுவது மிகவும் கடினம், ஏனென்றால் எல்லோரும் என்னைத் தங்களது சொந்த மகள், சகோதரி அல்லது நண்பராகவே நடத்தினர். எனவே, அவை அனைத்தையும் நான் நிறைவாகப் பெற்றிருக்கிறேன்.

நான் அவர்களை அதிகமாக இழக்கிறேன், அவர்களும் என்னை மிகவும் இழக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் எனக்காக செய்த எல்லாவற்றையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். நான் அவர்களை மிகவும் நேசிக்கிறேன்.

தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான உறவு

முதலாவது விடயம் இலங்கையரான எம்மிடையே சிங்களவர்கள் அல்லது தமிழர்கள் என்ற வித்தியாசம் இருக்கக்கூடாது. நாம் அனைவரும் மனிதர்களாக இருந்தால் நம்மிடையே எந்த வேறுபாடும் இருக்க வேண்டிய அவசியமில்லை. நம்மிடையே நல்ல புரிதல் இருக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருக்க வேண்டும். எமது சமூகம் எமது நாடு எமது உலகத்தில் எங்களது எதிர்காலம் என்று எண்ண வேண்டும்.

நாம் அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும், அனைவரையும் நேசிக்க வேண்டும், அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.

உங்கள் அனுபவத்தின் அடிப்படையில் அடுத்த தலைமுறை என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

நான் எல்லோரிடமும் சொல்கிறேன், உங்களுக்கு ஏதாவது நிகழ்ந்தால் அதே போன்று தான் மற்றையவர்களுக்கும் என்று நினையுங்கள். மற்றையவர்களைப் பற்றியும் சிந்தியுங்கள். எளிமையாக இருங்கள். அனைவருடனும் ஒரே மாதிரி வாழப் பழக வேண்டும் யாரும் மோசமானவர்கள் இல்லை. அனைத்திலும் நல்லவற்றைக் காண முயற்சி செய்யுங்கள்.

எல்லாவற்றையும் அனைவரின் நன்மையையும் நம்புங்கள். நேசிப்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்காமல் ஒரு நல்ல மனிதராக இருங்கள். உங்களுக்காகவும், எனக்காகவும், நம் அனைவருக்கும் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க முயற்சிக்கவும்.

இறுதியாக, தமிழ் பேசும் என் சகோதர உறவுகளுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். உங்கள் மீதான என் அன்பை வெளிப்படுத்த எனக்கு இந்த வாய்ப்பை் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

ஆக்கம்- துவாரகி சுந்தரமூர்த்தி

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

Previous articleஎமது வரலாற்றினை தொடர்ச்சியாக இளம் தலைமுறையினருக்கும் கடத்துவோம்
Next articleமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரதான நிகழ்வு பிரத்தியேக இடத்தில்: பிரகடனமும் வெளியீடு!