அண்மையில் மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட வாசஸ்தலத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் போராட்ட நியாயங்களை எடுத்துரைத்த இளைஞன் உயிரிழந்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்கு முன்பாக கடந்த முதலாம் திகதி இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 54 பேர் கடுமையாக தாக்கப்பட்டிருந்தனர்.
இதில் காயமடைந்த 35 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, போராட்டத்தின் பிரதான பொதுக் கருத்தை மிகவும் நிதானமாகவும், விவேகமாகவும் பொலிஸாரிடம் முன்வைத்த இளைஞர் ஒருவரும் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்
மறுநாள் தாக்கப்பட்ட இளைஞன் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் வெளியாகியிருந்தது. இந்த இளைஞனின் தலையில் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
7 மணித்தியாலங்கள் வரை காணாமல் போயிருந்த இளைஞன் தாக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.
படுகாயமடைந்த வரை நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
குறித்த இளைஞன் பொலிஸாரின் முன்னால் வெளியிட்ட கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பாராட்டிற்குள்ளாகியிருந்த நிலையில் குறித்த இளைஞன் இறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இவர் தொடர்பாக எமது செய்திப்பிரிவு விசாரணைகளில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் களுபோவில வைத்தியசாலையின் 37வது வார்டில் இவர் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும்
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மெதுவாக குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஜனநாயக நாட்டில் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பிய இளைஞன் மீது கொடூர தாக்குதல்