ஹூன்கம பகுதியில் நிவாரண நிதி வழங்கிக் கொண்டிருந்த கிராம சேவகரை தாக்க முற்பட்டமை தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
ஹூன்கம பகுதியில் 5000 ரூபாய் நிவாரணப் பணத்தை வழங்கிக் கொண்டிருந்த கிராம சேவகர் ஒருவரை பெண்ணொருவர் கத்தியைக் கொண்டு தாக்க முற்பட்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் 52 வயதுடைய பெண்ணொருவரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அரச ஊழியர்கள் பொதுமக்களின் பாதுகாப்பையும் , நலனையும் கருத்திற் கொண்டே செயற்பட்டு வருகின்ற நிலையில் , அவர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ள கூடாது.
இதன்போது அரச ஊழியர் ஒருவரினால் ஏதேனும் தவறு இடம்பெற்றால் அது தொடர்பில் , அவரின் உயர் அதிகாரிக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்நிலையில் , அரச ஊழியர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் தொடர்பில் தெரியவந்தால் , அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும். அதற்கமைய இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான பெண்ணை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.