நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்த 16 தமிழ் அரசியல் கைதிகள் உள்பட 93 கைதிகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
இந்த தகவலை சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார்.
அனுராதபுரம் சிறையிலிருந்து 15 பேரும் யாழ்ப்பாணம் சிறையிலிருந்து ஒருவருமாக 16 பேர் விடுதலை பெற்றுள்ளனர்.
பொசன் பெர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் சிறப்பு பொதுமன்னிப்பின் பேரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 16 பேருக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளது.
அவர்களில் 15 சிறைக்கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்தும் மற்றுமொருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்தும் இன்று விடுதலையாவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்களைத் தவிர மேலும் 77 சிறைக்கைதிகள் நேற்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் 225 தூக்குத் தண்டனை கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் பேரில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக தண்டனை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது