15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைக்காக இணையத்தில் விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒரு பொலிஸ் அதிகாரியும், வங்கியொன்றின் முன்னாள் முகாமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தினால் இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதானவர் பொலிஸ் விளையாட்டு பிரிவின் துணை ஆய்வாளர் ஆவார்.
சிறுமியின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட விசாரணையிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதான நபர்களை இன்று கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன் முற்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் 12 வது சந்தேக நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அச்சிறுமியை கொள்வனவு செய்து, பாலியல் தேவைக்காக பயன்படுத்திக்கொண்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் கைது செய்வதற்கு வலைகள் விரிக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சிறுமிகள் பெண்கள் உள்ளிட்ட 5,000க்கும் அதிகமானவர்களை பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்வதற்கு இணையத்தளங்களின் ஊடாக, விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்