பதின் மூன்று வயது சிறுமியை வன்புணர்வுக்கு செய்த வீடியோ ஒன்றினை காட்டி 10 லட்சம் ரூபா கப்பம் கேட்டு நீண்டகாலமாக மிரட்டி வந்த இரு சந்தேக நபர்களை தலைமறைவாக இருந்த நிலையில் கல்முனை பொலிஸார் இன்று (18) கைது செய்துள்ளனர்.
சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 13 வயதான தனது மகள் தொடர்பில், 03 சந்தேக நபர்கள் வீடியோ ஒன்றினை முன்வைத்து கப்பம் கேட்பதாக, குறித்த சிறுமியின் தாயார் – கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி 05ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.
இதற்கமைய பொலிஸார் 03 சந்தேக நபர்களையும் அடையாளம் கண்ட நிலையில் தேடுதல் மேற்கொண்டு வந்தனர்.
எனினும் சந்தேக நபர்களில் ஒருவரான சாய்ந்தமருது 03ஆம் பிரிவைச் சேர்ந்தவர் டுபாய் நாட்டுக்கு தப்பி சென்ற நிலையில் ஏனைய சந்தேக நபர்களில் கப்பம் கோரியவரான மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபர் கல்முனை பகுதி உணவகமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பின்னர் கைதானவரின் தகவலுக்கமைய இச்சம்பவத்துக்கு உடந்தையாக செயற்பட்ட மற்றுமொரு 31 வயதுடைய சந்தேக நபர் சாய்ந்தமருது பகுதியில் வைத்து கைதானார்.
குறித்த இரு சந்தேக நபர்களையும் பொலிஸ் விசேட பிரிவின் தகவலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் துரிதமாக செயற்பட்ட கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமை குழுவினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடமும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் வெளிநாட்டிற்கு தப்பி சென்ற சந்தேக நபரை கைது செய்ய, நீதிமன்ற நடவடிக்கை ஊடாக சர்வதேச பிடியாணை உத்தரவினை பெறுவதற்கு எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.