சுவிட்ஸர்லாந்தில் கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கில், 11 நிமிடம் மட்டுமே குற்றவாளி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார் என்று அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை பெண் நீதிபதி ஒருவர் குறைத்ததால் கண்டனம் தெரிவித்து மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுவிட்ஸர்லாந்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் ஐந்தில் ஒரு பெண் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம்னெஸ்டி அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாலியல் வல்லுறவு வழக்கில் தீர்ப்பளித்துள்ள பெண் நீதிபதி ஒருவர், குற்றவாளி 11 நிமிடம் மட்டும் தான் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார் எனக் கூறி அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைத்திருக்கிறார். அவரின் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து மகளிர் அமைப்புகள் போராடி வருகின்றனர்.
சுவிட்ஸர்லாந்தில் பசல் நகரில் கடந்த 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் 33 வயதாகும் பெண் ஒருவரை அவரின் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வைத்தே இருவர் கூட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் இருவரில் ஒருவருக்கு 17 வயது சிறுவன் என்பதால் அவர் மீதான வழக்கை சிறார் நீதிமன்றம் தனியாக விசாரித்து வருகிறது.
அதே நேரத்தில் மற்றொருவரான போர்த்துகலைச் சேர்ந்த 32 வயது இளைஞர் மீதான வழக்கை விசாரித்த பெண் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ள கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதோடு போராட்டத்துக்கும் வழிவகுத்துள்ளது.
இந்த மேன்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை வாசித்த அந்த பெண் நீதிபதி கூறுகையில், குற்றவாளி அந்த பெண்ணை 11 நிமிடம் மட்டுமே பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார். மேலும் அந்த பெண் இரவு விடுதியில் வைத்து அந்த இளைஞருக்கு சில சமிஞ்ஞைகளை முன்னவே கொடுத்திருக்கிறார். எனவே குறைந்த நேரமே குற்றம் நடந்திருப்பதாலும், ஸ்விஸ் சட்டதிட்டங்களுக்கு இணங்கி அந்த நபருக்கான தண்டனையை குறைப்பதாக தீர்ப்பளித்துள்ளார்.
இதன் மூலம் குற்றவாளியின் தண்டனை 51 மாதங்களில் இருந்து 36 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. குற்றவாளி ஏற்கனவே சிறை தண்டனை அனுபவித்து வருவதால் அவர் விரைவிலேயே விடுதலை ஆகக் கூடும் என செய்திகள் வெளியாகின.
குறைந்த நேரமே குற்றத்தில் ஈடுபட்டதாக கூறி குற்றவாளிக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை குறைத்ததற்கு எதிராக நூற்றுக்கணக்கிலான பெண்கள் பசல் நீதிமன்றத்தின் முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தீர்ப்பை கேள்விப்பட்ட அந்த பாதிக்கப்பட்ட பெண்ணும் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
சுவிட்ஸர்லாந்து சட்டப்படி இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நாட்டில் பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் வலுவாக இல்லை எனவும் பெண்கள் போராடி வருகிறார்கள்.