Home நாட்டு நடப்புக்கள் வீதியோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை முற்றாக முடக்கிய கொடிய கொரோனா!

வீதியோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை முற்றாக முடக்கிய கொடிய கொரோனா!

முன்னர் மாதிரி வியாபாரம் இப்போது இல்லை. கொரோனா வந்து எங்கட சீவியத்தை இல்லாமல் ஆக்கிப் போட்டுது. யாரும் எங்களிடம் வந்து எதையும் வாங்கிட்டுப் போறாங்க இல்லை.

வீதியில் செய்யிற வியாபாரத்தை நம்பித்தான் இவ்வளவு காலமும் இருந்தோம். இப்போ அதுவும் இல்லாமல் போயிற்று.

கொரோனா பயம் போய்த் தொலைஞ்சாத்தான் எங்களால் சீவிக்க முடியும்’ என கல்முனையில் வீதியோரத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் செல்வமலர் என்பவர் கூறினார்.

தற்போதைய கொரோனா பீதி மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.

முன்னர் போன்று இயல்பான வாழ்க்கை முறையை மக்களால் முன்னெடுக்க முடியாதுள்ளது. கொரோனா எங்கிருந்து யாருக்கு எப்படித் தொற்றும் என்பது தெரியாதுள்ளது.

அதுவும் கிழக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வறுமையின் பிடியில் சிக்கியுள்ள கூலித் தொழிலாளிகளின் குடும்பங்கள் அன்றாடம் உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாது திண்டாடி வருகின்றன.

கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் திடிரென கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இங்குள்ள மக்கள் கொரோனா பீதியுடனே வாழ்கின்றனர். இதனால் வீதிகள் சனநடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

அன்றாடக் கூலித் தொழிலாளிகளின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மரம் ஏறி தேங்காய் பறிப்பவர்கள், வீட்டு வேலைகளுக்கு சென்று கூலித் தொழில் செய்பவர்கள், வீதிகளில் சிறு வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டு வேலைகளுக்குச் சென்று அங்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்துவரும் பலரின் நிலை பரிதாபமாகவுள்ளது. வீட்டு வேலைகளுக்குச் செல்லும் ஆனந்தி என்பவர் கூறும் போது “எனக்கு மூணு புள்ளைகள் இருக்குது.

விடிஞ்சா ஒவ்வொரு நாளும் எங்காவது வீட்டுக்குப் போய் வீடு வளவுகளைத் துப்பரவு பண்ணியும், குப்பைகள் அள்ளியும் அவங்க தாற எந்த வேலைகளையும் செய்து கொடுத்துப்போட்டு

அங்கு கிடைக்கிற காசில்தான் என்ட வீட்டுக்கு அரிசி, பருப்பு, கறி சாமான் வாங்கிட்டுப் போய் சோறுகறியாக்கிச் சாப்பிடுறது.

இப்ப கொரோனா பயத்தினால் எங்களை ஆரும் வீட்டு வேலைகளுக்கும் கூப்பிடுறதில்லை. ஆறு மாசமா ஒழுங்கான சோறு கறி கூட இல்லை” என்றார்.

மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் சோளம் அவித்து அதனை விற்பனை செய்யும் தொழிலாளியான கராளன் இப்படிக் கூறுகின்றார்:

‘றோட்டில் போற சனங்கள நம்பித்தான் நாங்க சோளம் விற்பனை செய்து வருகிறம்.கடன்பட்டுத்தான் சோளனும் வாங்குறம். வாங்கும் சோளன் எல்லாம் புழு கடிச்சு பழுதாப் போய் இருக்கிறது.

சிலது பிஞ்சுக்குலையாக இருக்கிறது. செய்கை செய்யும் சோளன் படைப்புழுவால் நாசமாகுது. அதுதான் எங்களுக்கு விற்பனைக்கு வாங்கிற சோளனும் நல்லதில்லை.

முந்தி எண்டால் ஒரு நாளைக்கு மூவாயிரம், நாலாயிரத்துக்கு வியாபாரம் போகும்.

இப்போ ஆயிரம் ரூபாக்கும் சோளன் விற்குதில்லை. றோட்டில் போறவங்க நிற்பாட்டி வாங்கப் பயப்பிடுறாங்க. எங்களுக்கு கொரோனா இருக்கும் என்று அவங்களுக்குப் பயம்.

அவங்களுக்கு கொரோனா இருக்கும் என்று எங்களுக்குப் பயம். எங்கட குடும்பங்கள் கடும் கஷ்டத்தில்தான் இருக்கிறம்’ என்றார்.

தெருவில் அப்பம் சுட்டு விற்கும் குமாரி கூறும் போது ‘கனகாலமாக றோட்டுச் சைட்டில் அப்பம் சுட்டு விற்றுத்தான் என்ட வாழ்க்கை போகிறது.

இந்த நெருப்பு வெக்கைக்குள், புகைக்குள் இருந்து அப்பம் சுட்டால் ஒரு நாளைக்கு எண்ணூறு ரூபா கிடைககும்.

என்ட புருஷன் வேலைக்குப் போன இடத்தில் சறுக்கி விழுந்து கால் நடக்க ஏலாமக் கிடக்கிறார். றோட்டால போற சனங்கள் நிற்பாட்டி அப்பம் வாங்கிச் சாப்பிட்டுப் போகும்.

இப்ப அப்பம் வாங்கிச் சாப்பிடுறத்துக்குப் பயப்பிடுறாங்க. என்ன செய்யிறது. நான் அப்பம் சுடாட்டி வீட்டில் அடுப்பு எரியாது’ என்றார்.

இப்படி கிழக்கில் வீதியோரங்களில் சிறு வியாபாரங்களில் ஈடுபடுபவர்களின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பீதி என்றைக்கு மக்களை விட்டு அகல்கிறதோ அன்றைக்குத்தான் மக்கள் தங்களது இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 63 ஆக அதிகரித்தது
Next articleகொரோனா தடுப்பூசியால் மலட்டுத் தன்மை ஏற்படுமா? மருத்துவ நிபுணர் விளக்கம்