வவுனியா நகரில் காணப்பட்ட மர்ம பொதியால் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் வந்து சோதனை நடத்தினர்.
வவுனியாவில் அமைந்துள்ள கொப்பேகடுவ சிலைக்கு முன்பாக இன்று (23) தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் கறுப்பு யூலை கலவரத்தை நினைவு கூர்ந்தும், இனப்படுகொலைக்கு நீதி வேண்டியும் போராட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
போராட்டம் முடிவடைந்து சிறிது நேரத்தில் குறித்த பகுதியில் இருந்த கொப்பேகடுவா சிலை முக்பாக இராணுவ சீருடையில் தயாரிக்கப்பட்ட பை ஒன்று காணப்பட்டது.
இதனை அவதானித்தவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிசார் குறித்த மர்ம பொதி அருகில் எவரும் செல்ல விடாது பாதுகாத்தனர்.
அதன்பின்னர், விசேட அதிரடிப் படையினரின் குண்டு செயலிக்க செய்யும் பிரிவினரை வரவழைத்து, குறித்த சிலை அருகில் இருந்த வர்த்தக நிலையங்களை சிறிது நேரம் மூடியதுடன்,
கண்டி வீதி ஊடான போக்குவரத்தையும் 20 நிமிடங்கள் தடை செய்து குறித்த பொதியை குண்டு செயலிழக்க செய்யும் கருவியின் உதவியுடன் சோதனை செய்தனர்.
இதன்போது குறித்த பொதியில் ஆலய துண்டு பிரசுரங்களும், அதிஸ்டலாப சீட்டு ரிக்கற்றுக்களும், வேறு தாள்களும் காணப்பட்டன.
அதனை மீட்ட அதிரடிப்படையினர் அவற்றை வவுனியா பொலிசாரிடம் ஒப்படைந்தனர். இதனையடுத்து நகரம் வழமைக்கு திரும்பியிருந்தது.