வவுனியாவில் ஒன்பது இடங்களில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 3 இளைஞர்கள் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் வவுனியாவின் உக்குளாங்குளம் பகுதியில் 4 வீடுகளிலும், பண்டாரிக்குளம் பகுதியில் 2 வீடுகளிலும், நெளுக்குளம் பகுதியில் ஒரு வீட்டிலும், கூமாங்குளம் பகுதியில் ஒரு வீட்டிலும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஒரு வீட்டிலும் என ஒன்பது இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த திருட்டுச் சம்பவங்களின் போது நகைகள், மோட்டர் சைக்கிள், துவிச்சக்கரவண்டி, இலத்திரனியல் உபகரணங்கள் என்பன திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் கியான் தலைமையில், பல பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது அவர்களிடம் இருந்து மோட்டர்கள் 3, துவிச்சக்கரவண்டி, எரிவாயு கொள்கலன்கள் 8, இலத்திரனியல் பொருட்கள் உட்பட தங்க நகைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.