வவுனியாவில் இருவேறு பகுதிகளில் கிணற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வவுனியா – மதுராநகர்
வவுனியா – மதுராநகர் பகுதியில் கட்டில்லாத பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த கனசுந்தரம் சம்சன்(10) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் அருகில் காணப்பட்ட கட்டில்லாத பாழடைந்த கிணற்றில் மீன் பிடிப்பதற்காக தூண்டில் போட்ட போது தவறி விழுந்துள்ளார்.
இதனையடுத்து அயலவர்கள் துணையுடன் மீட்கப்பட்ட போதும் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளாதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா – கல்நாட்டினகுளம்
வவுனியா – கல்நாட்டினகுளம் பகுதியில் கிணற்றிலிருந்து 10 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று (18) இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியைச் சேர்ந்த சாந்தன்(10) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் மாலை தனது வீட்டிலிருந்து வெளியில் சென்ற குறித்த சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமையினால் அவனது உறவினர்கள் தேடியுள்ளனர்.
இதன்போது குறித்த சிறுவன் வீட்டிற்கு அண்மையில் உள்ள கிணறு ஒன்றில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது.
சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட கரும்புள்ளியான் குளத்தில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு கரும்புள்ளியான் குளத்தினுள் மீன்பிடிப்பதற்கு வலையுடன் சென்ற குடும்பஸ்தரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பாண்டியன்குளம் பகுதியை சேர்ந்த 43 வயதுடைய இரு பிள்ளையின் தந்தையான பசுபதி ஜெகதீஸ்வரன் என்பவர் ஆவார்.
மேலும் சடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.