றம்புக்கனை பிரதேசத்தில் இன்று காலை முதல் இடம்பெற்ற மோதல்களில் 24 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களில் எட்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் உள்ளடங்குவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களும் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டின் பின்னணி
எரிபொருள் விலைக்கு எதிராக ரம்புக்கனை தொடருந்து கடவையால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்றபோது போராட்டக்காரர்களும் காவல்துறையினருக்கும் இடையில் கடுமையான மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தொடருந்து கடவையால் சென்ற எரிபொருள் தாங்கி ஊர்தியை வழிமறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்கு தீ வைக்க முயன்றதுடன் முச்சக்கரவண்டி ஒன்றுக்கு தீவைத்துடன், அந்த இடத்திலிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டனர்.
அதனை தடுக்கும் வகையில் காவல்துறையினர் கண்ணீர் புகை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
அதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலகத் தடுப்புப் காவல்துறையினர் மீது கற்கள் உள்ளிட்ட பொருட்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். நிலைமை எல்லை கடந்ததால் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.
மறு அறிவித்தல் வரை ஊரடங்கு
இதேவேளை, றம்புக்கனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு மூவர் கொண்ட குழு
றம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக, மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் உள்ள அலுவலகத்திலிருந்து விசேட குழு ஒன்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.