யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிழவிதோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதியின் மரணத்திற்கான காரணம் வெளிப்பட்டுள்ளது.
உடலில் நஞ்சு பரவியதாலேயே அவர் மரணித்தது பிரேத பரிசோதனையில் உறுதியானது.
க.பொ.த உயர்தரம் கற்கும் 19 வயதுடைய மாணவி நேற்று முன்தினம் உயிரிழந்திருந்தார். வீட்டில் திடீரென நோய்வாய்ப்பட்டார் என குறிப்பிட்டு, மாணவியை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றிருந்தனர்.
எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சமயத்தில் மாணவி உயிரிழந்த நிலையிலேயே காணப்பட்டார்.
மாணவி இரண்டு மாத கர்ப்பமாக உள்ளதாகவும் குடும்பத்தினரால் வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில், நெல்லியடி பொலிசார், பருத்தித்துறை நீதிமன்றத்தில் பி அறிக்கை தாக்கல் செய்தனர். மாணவியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்த நீதிமன்றம் கட்டளையிட்டது.
நேற்று இரவு பிரேத பரிசோதனை மேற்கொண்ட போது, மாணவி இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தது உறுதியானது.
அத்துடன், அவரது உடலில் நஞ்சு பரவியதாலேயே மரணம் நிகழ்ந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
எனினும், அவரது உடலில் எப்படி நஞ்சு கலந்தது என்பதை பிரேத பரிசோதனையில் கண்டறிய முடிவில்லை.
இதையடுத்து, மாணவியின் உடல் பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பான விரிவான விசாரணையை நடத்த நெல்லியடி பொலிசாருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
அத்துடன், மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான இளைஞனை அடையாளம் காணும் முயற்சியிலும் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
யாழில் இறந்த நிலையில் மாணவி மீட்பு !! வைத்தியசாலையில் வெளியான அதிர்ச்சி தகவல்