அலரி மாளிகைக்கு முன்பாகவும், காலிமுகத்திடலிலும் இடம்பெற்ற அமைதியான போராட்டங்களின்மீது, தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து, முன்னாள் பிரதமரின் பாதுகாப்பு பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட சில அதிகாரிகளிடம் தற்சமயம் வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிதுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை
அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரின் பாதுகாப்பு பிரிவு பணிப்பாளருக்கு மேலதிகமாக, கொள்ளுப்பிட்டி காவல்துறை பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில், உடனடியாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு, காவல்துறைமா அதிபர் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதேநேரம், நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் குறித்து, உடனடி விசாரணை நடத்துமாறு காவல்துறைமா அதிபருக்கு, சட்டமா அதிபர் அறியப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.