பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் காவல்துறையின் முன்னாள் அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை முன் பிணை நிபந்தனைகளின் பேரில் செல்வதற்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வு, இன்று அனுமதி வழங்கியது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க தவறியது தொடர்பிலான குற்றச்சாட்டை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள, மேல் நீதிமன்ற நீதிபதிகள் நாமல் பலல்லே, ஆதித்ய படபேண்டி மற்றும் முகமது இர்ஷதீன் ஆகியோர் அடங்கிய விசாரணைக்குழுவின் முன்னால், இந்த இரண்டு முன்னாள் உயர் அதிகாரிகளும் இன்று வரவழைக்கப்பட்டனர்.
இதன்போது சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான துணை மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள், மறு ஆய்வு செய்யப்பட்டு அடுத்த அழைப்பு திகதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, குற்றப்பத்திரிகைகளுக்கு எதிராக ஆட்சேபனைகளை எழுப்ப எதிர்பார்ப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தநிலையில்,பாதுகாப்பு முன்னாள் செயலாளர் மற்றும் காவல்துறை முன்னாள் அதிபர் மீது இரண்டு தனித்தனியான வழக்குகள் ஆகஸ்ட் 27 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படஉள்ளன.
சட்டமா அதிபர், இரண்டு பேருக்கும் எதிராக 864 குற்றங்கள் அடங்கிய, குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளார்.
விசாரணை ஜூரி (அரங்கூறுநர் சபை) இல்லாமல் இடம்பெறும். இரண்டு முன்னாள் உயர் அதிகாரிகளும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னரே அறிந்திருந்தும் தடுக்க நடவடிக்கை எடுக்க தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.