யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் – பட்டா ரக வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் என்பவரும் , அவரது இரு பிள்ளைகளும் பயணித்த பட்டா ரக வாகனமே விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் ஜனுசன் (வயது 12) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் தந்தையான நாகமணி தயாபரன் (வயது 45) மற்றும் உயிரிழந்தவரின் சகோதரனான தயாபரன் தனுஷன் (வயது 15) ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பயணித்த புகையிரதத்துடன் , கொடிகாமம் மிருசுவில் வைத்திய சாலைக்கு அண்மையில் உள்ள புகையிரத கடவையில் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது.
அதில் பட்டா ரக வாகனத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் படுகாயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களின் நிலமையும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவருகிறது.
இன்று காலை 10.15 மணியளவில் குறித்த விபத்து நடந்துள்ளது.
பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊடாக பட்டா வாகனம் பயணிக்க முயற்சித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் புகையிரத பாதையை மறித்து மக்கள் கற்களை போட்டு வருவதாக தெரியவந்துள்ளது.