கடந்த சில தினங்களிற்கு முன்னர் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பெண்கள் மருத்துவ விடுதி ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரிற்கு எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.
இந்நிலையில் அவருடன் தொடர்பினை மேற்கொண்ட தாதியர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.
அவர்களிற்கு நேற்று மேற்கொண்ட PCR பரிசோதனையில் தாதிய உத்தியோகஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றிற்கு உள்ளானமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த நோயாளியுடன் தொடர்பினை பேணிய வைத்திய உத்தியோகஸ்தர்கள் அன்ரிஜன், PCR பரிசோதனைகளிற்கு முகம் கொடுக்கவில்லை எனவும் தெரியவருகின்றது.
மேலும் நேற்றய தினம் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 11 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதாகவும், இதில் நான்கு சிறுவர் சிறுமிகள் அடங்குவதாகவும் தெரியவருகின்றது.
இவர்களில் வெவ்வேறு பிரதேசங்களை சேர்ந்த அரச உத்தியோகஸ்தர்களும் அடங்குவதாக தெரியவருகின்றது.
தொற்றுக்குள்ளானவர்களில் ஆண்கள் ஈச்சிலம்பற்று பராமரிப்பு நிலையத்திற்கும் பெண்கள், சிறுவர்கள் காத்தான்குடி பராமரிப்பு நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.