இலங்கையில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்க முற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
யாழ் நீதிவான் நீதிமன்றில் இன்றிரவு அவர் முற்படுத்தப்பட்ட போது, பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
யாழ் மாநகர சபையில் வரி வசூலிப்பாளர்களுக்கு சீருடை வழங்கியமையை அடுத்து சர்ச்சை எழுந்தது.
தமிழீழ காவற்றுறையின் சீருடையை ஒத்த சீருடையை வழங்கியதாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
யாழ் மாநகர ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல்வர் சட்டத்தரணி
வி.மணிவண்ணன் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோவினால் இன்று அதிகாலை 1.40 மணிக்கு கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டார்.
சுமார் 10 மணிநேர விசாரணையின் பின்னர் முதல்வர் வி. மணிவண்ணன் இன்றிரவு 8 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120, 332 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
யாழ் சட்டத்தரணிகள் முன்னிலையாகி மணிவண்ணன் தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.
முதல்வர் மணிவண்ணனை பிணையில் விடுவித்த நீதிமன்று வழக்கை ஜூன் 28ஆம் திகதிவரை ஒத்திவைத்தது .