நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகுபவர்களை சிகிச்சை மத்திய நிலையங்களுக்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்ற போதிலும்
மீண்டும் அவர்களை வீடுகளுக்கு அனுப்பும் பொது எவ்வித அரச உதவிகளும் வழங்கப்படுவதில்லையென குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதுடன் இதனால் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக கூறுகின்றனர்.
சிகிச்சை மத்திய நிலையங்களுக்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அரசாங்க செலவில் தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
என்றாலும் 7 அல்லது 10 நாட்கள் முடிந்த பின்னர் அவர்களாகவே வீடு செல்லுமாறு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் தோட்டத்தொழிலாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துவருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு மூன்று நாட்களுகளுக்கு முன் டிக்கோயா தோட்டத்தில் இருந்து கொரோனா மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்கள் 10 நாட்கள் முடிந்த பின்னர் எவ்வித ஏற்பாடுகளுமின்றி வீடு செல்லுமாறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருக்கும் அதிகாரிகள் பணித்துள்ளனர்.
எனினும் அதிகமானவர்களிடம் சொந்த செலவில் தனியார் வாகனம் ஒன்றினை பெற்று செல்ல முடியாத நிலையே காணப்படுகின்றது. 700 ரூபா வீதம் செலவு செய்தே ஒவ்வொருவரும் வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று இரவு கடவளை தோட்டத்தை சேர்ந்த 36 பேர் 7 நாட்கள் தனிமைப்படுத்தல் முடிந்த பின்னர் வீடு செல்லுமாறு அதிகாரிகளால் பகூறப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் வீடு செல்வதற்கு வாகன வசதிகள் எதுவுமில்லாத காரணத்தில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் உணவுக்கு கூட வழியின்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதில் முதியவர்கள் சிறுவர்கள் உட்பட அனைவரும் செய்வதறியாதிருந்த நிலையில் மலையக மக்கள் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் ஊடாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணனை தொடர்புகொண்டு பஸ் ஒன்றினை பெற்று வீடு வந்து சேர்ந்ததாக தெரிவித்தனர்.
இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஸ்ணனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதகாலமாக கொரோனா தொற்று பரவல் காரணமாகவும் தோட்டத்தில் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதனாலும் தொழிலாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
கொரோனா தொற்று ஏற்பட்டால் எவ்வித ஏற்பாடுமின்றி அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இவ்வாறு அழைத்து செல்பவர்களுக்கு வீடு திரும்புவதற்கு வாகன வசதிகள் செய்து கொடுக்காவிட்டால் அவர்கள் எவ்வாறு வீடு திரும்புவது?
அப்படி பொது போக்குவரத்தில் வருவதென்றால் 14 நாட்கள் முடிவதற்குள் ஏனையவர்களுக்கு தொற்று பரவாதென்ற உத்தரவாதம் உள்ளதா? தனிமைப்படுத்துவதில் உள்ள பலன் என்ன? உள்ளிட்ட கேள்விகள் எழுகின்றன.
எனவே இந்த நடவடிக்கைகள் குறித்து சரியான முறையில் பொது மக்களுக்கு விளக்கமளித்து அழைத்துச் செல்லப்பட வேண்டும். சரியான நடைமுறைகள் பின்பற்றுவதற்கு பொறுப்பு வாய்ந்தவர்கள் நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டுமென தனிமைப்படுதலை முடித்து வந்தவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
(செய்தி – ஹட்டன் கே.சுந்தரலிங்கம்)