Home Tamil News மறைந்திருக்கும் மகிந்த பிறப்பித்த உத்தரவு: ரணில் தலைமையில் புதிய அமைச்சரவை

மறைந்திருக்கும் மகிந்த பிறப்பித்த உத்தரவு: ரணில் தலைமையில் புதிய அமைச்சரவை

புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இந்த வாரத்திற்குள் அமைக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று அல்லது நாளை புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என ஜனாதிபதி செயலக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறுகிய காலத்திற்கேனும் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி கோரியதாகவும், அவரின் அழைப்பை ஏற்று பிரதமர் பதவியை பொறுப்பேற்க ரணில் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதிக்கும் முன்னாள் பிரதமருக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது.

இதன் போது ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்றுவரும் அமைதியான போராட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என ரணில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஒரு பிரிவினர் மற்றும் ரணில் விக்ரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்பரப்பில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில் தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிக்க ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

இதற்கு பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் பெரும்பான்மை ஆதரவுடன் ரணில் பதவி ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதனுஷ் வெற்றிமாறன் படத்தை பற்றிய வெளியான அப்டேட் !!
Next articleநாடு முழுவதும் 5 மணி நேர மின்வெட்டுக்கு அனுமதி: இன்று மின்தடை நடைமுறையாகவுள்ள விதம்