அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை யின் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இப்போராட்டத்தை இன்று (08) காலை 8 மணி முதல் பகல் 12 மணிவரை மேற்கொண்டுள்ளனர்.
இந்த போராட்டத்தின்போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கையில்,
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எம். ஜவாஹிரின் நிருவாக முறைகேடுகள், நிருவாக அடக்குமுறைகள், கொவிட் தொடர்பான நோயாளிகளின் தவறான நிருவாக நடைமுறைகள் மூலம் நோயாளிகள் மற்றும்
ஊழியர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிய அவரது செயற்பாடுகளைக் கண்டித்து பதில் வைத்திய அத்தியட்சகரை நீக்கி அவருக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தைக் கேட்டுக்கொண்டிருந்தோம்.
அதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் முன்னேற்றகரமான செயற்பாடுகள் எதுவும் இடம்பெறாத நிலையில், இன்று நாங்கள் அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளோம் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் .
இதில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் என்பன முற்றாகத் தடைப்படுவதுடன், அவசர சிகிச்சை, டயலைசிஸ், மகப்பேறு மற்றும் சிறுவர் சிகிச்சைப்பிரிவுகள் என்பன வழமைபோல் இயங்குகிறது.
எங்களின் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு எமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த போராட்டம் காரணமாக வைத்தியசாலை ஸ்தம்பித்த நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.