புத்தளம் – கொழும்பு வீதி மதுரங்குளிய-செம்பெட்டே பிரதேசத்திலுள்ள காணியொன்றிலிருந்து மனித எலும்புக்கூடுகள் மற்றும் துப்பாக்கி என்பவை மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.அசேல டி சில்வா முந்தலம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்திலுள்ள காணியில் மனித உடல் எச்சங்கள் மற்றும் துப்பாக்கி கிடப்பதைக் கண்டு பிரதேச மக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் மனித உடல் எச்சங்களையும் துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.
சில காலத்துக்கு முன்பு உயிரிழந்த ஒருவர் அல்லது இருவரின் உடல் எச்சங்களாக இவை இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 99 எம்.எம். துப்பாக்கியே இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் இரசாயனப் பகுப்பாய்வுக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.