திருக்கோவில் பிரதேசத்தில் மதுபோதையில் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் செயற்பட்ட பொலிஸ் கான்ஸடபிள் ஒருவரைத் திருக்கோவில் பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரி மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் குறித்த பொலிஸ் அதிகாரி திருக்கோவில் மண்டானை பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
இவர் விடுமுறையில் வீடு சென்றுள்ள நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் மதுபோதையில் அந்த பகுதியில் அமைதிக்குப் பங்கம் விளைவித்துள்ளார்.
இதனால் அப்பகுதியிலிருந்து 119 பொலிஸ் அவசர சேவைக்கு வந்த தொலைபேசியையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். மதுபோதையிலிருந்த பொலிஸ் அதிகாரியை கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர முயன்றபோது அவர் பொலிஸாரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவரை கைது செய்து இன்று அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.