ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்கலடி குமார வேலியார் கிராமத்தில் 65 வயது தாயொருவர் தனது 45 வயது சொந்த மகனினால் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று சற்றுமுன் இடம்பெற்றுள்ளது.
இடது கை மற்றும் கால் ஊன்று கோல் துணையின்றி நடக்க முடியாத 65 வயதான வேலுப்பிள்ளை தவமணி என்பவரே வீட்டின் பின்புறமாக மலசலகூடம் அமைந்துள்ள பகுதியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மதுபோதையுடன் காணப்பட்ட 45 வயதான குறித்த தாயின் மகனே தன்னை பெயர் சொல்லி அழைத்து தொந்தரவு செய்து வந்ததன் காரணமாக கொலை செய்ததாகத் தெரிவித்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலைக்குப் பயன்படுத்திய கத்தியும் ஏறாவூர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு விஜயம் செய்ததுடன், ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.