நாட்டின் பொருளாதாரத்தை முறையாக முகாமை செய்யாமல் நெருக்கடிக்குள் தள்ளியதாக அரசின் மீது குற்றம்சாட்டி பொதுமக்கள் நடத்தி வரும் பெரும் போராட்டங்களை தொடர்ந்து, அண்மைக்கால வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதியான இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று இராஜினாமா செய்தார்.
மஹிந்த ராஜபக்ஷவின் பதவிவிலகல் கடிதம் நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகலுக்கான வர்த்தமானியை ஜனாதிபதியின் செயலாளர் நேற்று மாலை வெளியிட்டார்.
மகிந்த ராஜபக்சவின் இராஜினாமா 2022 மே 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என வர்த்தமானி அறிவித்தல் மேற்கோளிட்டுள்ளது. அலரிமாளிகை, காலி முகத்திடல் மற்றும் கொழும்பு மற்றும் பிற நகரங்களில் பல இடங்களில் வன்முறைப் போராட்டங்கள் வெடித்ததை அடுத்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் ராஜபக்ச ஆதரவாளர்களுக்கும் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை, தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் புதன்கிழமை (11) காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிகளின்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் கீழ் தவிர, பொது சாலைகள், ரயில் பாதைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது பொது கடற்கரைகளில் யாரும் இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மோதல்களில் 218 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவும் அவரது சாரதியும் நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மற்றும் மோதலின் போது உயிரிழந்துள்ளனர்.
வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆபத்தான நிலையில் உள்ள பலர் வீரகெட்டிய வைத்தியசாலையில் இருந்து தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை அலரிமாளிகை, ஜனாதிபதி மாளிகையிலும் பதற்றமான சூழல் காணப்பட்டது.
அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அலரிமாளிகையை முற்றுகையிட முயன்றனர். குழுவை கலைக்க போலீசார் பலமுறை கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
அலரிமாளிகையின் பக்கவாயில்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.
பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த கமெராக்களும் போராட்டக்காரர்களால் உடைக்கப்பட்டதுடன், அலரிமாளிகையில் மீண்டும் கண்ணீர்ப்புகை வீசப்பட்டன.
இரவு வெகுநேரம் வரை அலரிமாளிகைக்கு வெளியே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பல வீடுகள் நேற்று தாக்கப்பட்டதோடு, பல வீடுகள் தீவைத்தும், கற்களால் வீசியும் தாக்கப்பட்டன.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது சகோதரர், ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த, முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, சாந்த பண்டார, பந்துல குணவர்தன, அருந்திக பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, கெஹலிய ரம்புக்வெல, ஜனக பண்டார தென்னக்கோன், நிமல் லான்ஷா, பந்துல குணவர்த்தன, காமினி லொக்குகே உள்ளிட்ட பலரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சொத்துக்கள் எரிக்கப்பட்டன.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் பெற்றோரான டி.ஏ.ராஜபக்ஷ தம்பதியினரின் நினைவுச் சின்னங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களால் அழிக்கப்பட்டன.
ராஜபக்ஷ அணியின் கலவரத்திற்கு ஒத்துழைத்த தொழிலதிபர்களும், ராஜபக்ஷக்களுடன் நெருக்கமாக இருந்த தொழிலதிபர்களும் தாக்கப்பட்டனர். நேற்றைய கலவரத்திற்கு ஆட்களை ஏற்றிச்செல்ல பேருந்து வசதி செய்து கொடுத்த மாத்தறை தொழிலதிபரின் வீடு தீக்கரையாக்கப்பட்டது.
நேற்று (9) ராஜபக்ச ஆதரவாளர்களால் அழிக்கப்பட்ட காலி முகத்திடலில் அமைக்கப்பட்ட GotaGoHome மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் குழுவொன்று நேற்று அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது.
நேற்று காலை அலரிமாளிகைக்கு வெளியே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் அமைதியின்மை மற்றும் வன்முறைகள் பதிவாகியுள்ளன.
அலரிமாளிகையில் ஒன்றுகூடிய ராஜபக்சவுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள், கடந்த சில நாட்களாக அலரி மாளிகைக்கு வெளியே அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்டிருந்த மைனா கோ கம போராட்ட கூடாரங்களை அழித்தனர்.
பின்னர் அவர்கள் அமைதியான போராட்டக்காரர்களுடன் மோதத் தொடங்கினர், இதனால் பல நபர்கள் காயம் அடைந்தனர். அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் கூடாரங்களும் எரிக்கப்பட்டன.
பின்னர் காலி முகத்திடலை நோக்கி பேரணியாக சென்ற ராஜபக்ச ஆதரவு குழுவினர் அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களையும் அழித்துள்ளனர். எனினும், அவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை தாம் GotaGoHome திடலை விட்டு செல்லப் போவதில்லையென மக்கள் தெரிவித்துள்ளனர். சிவில் ஆர்வலர்கள், நடிகர்கள் மற்றும் பலர் நேற்று மாலை GotaGoHome இல் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர்.
பொதுமக்கள் அமைதியான நாட்டைக் கோருவதாகத் தெரிவித்த நடிகர் ஜகத் மனுவர, ஆனால் அரசாங்கம் போராட்டங்களைத் தூண்டியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறான வன்முறைகளுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கினர் என்றார்.
மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்தமை மக்கள் போராட்டத்தில் கிடைத்த வெற்றி என சோசலிச இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
ராஜபக்சவின் அதிகாரத்தை தங்களால் உடைக்க முடியும் என்று யாரும் நம்பவில்லை, ஆனால் அதே இலக்கை அடைந்துவிட்டதாக குணசேகர கூறினார்.
மக்கள் சக்தியின் மீது தாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம் என்றும், இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற முடியும் என்றும் நம்புகிறோம் என்றார். நாட்டின் முற்போக்கு மக்கள் பெரும் போரில் வெற்றி பெற்றுள்ளதாக குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், GotaGoHome அவர்களின் முக்கிய குறிக்கோளாக உள்ளது என்று அவர் கூறினார்.