விஷால் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படமாக லத்தி அமைந்துள்ளது. இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால், அதன்பிறகு நடித்த சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, இரும்புத்திரை ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகரானார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் விஷால் படங்களுக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியி உள்ளது. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் பரவலான கவனத்தைப் பெற்றது. இதையடுத்து அவர் தற்போது புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கும் லத்தி படத்தில் நடித்து வருகிறார்.
லத்தி படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து ‘RANA’ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. பாலசுப்ரமணியம் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இந்த படம் அறிவிக்கப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரவலாக கவனத்தைப் பெற்றது.
லத்தி திரைப்படம் படம் தற்போது ஐந்து மொழிகளில் உருவாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் போஸ்டர் வெளியானது. இந்த படத்தில் விஷால் போலீஸ் கான்ஸ்டபிளாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஷால் சத்யம், பாயும் புலி, வெடி மற்றும் அயோக்யா ஆகிய படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது. ஆனால் அந்த படங்களைப் போல உயர் காவல் துறை அதிகாரியாக இல்லாமல் முதல் முதலாக கான்ஸ்டபிள் வேடத்தில் விஷால் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மாஸான ஆக்ஷன் காட்சியின் வெளியாகி இருக்கும் போஸ்டரில் லத்தி படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லத்தி திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த படத்துக்கு பிறகு விஷால் எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்து நடிக்கும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.