அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணமடைந்துள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வோர்ன் சில மாதங்கள் முன்பு தான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இப்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மற்றொரு ஜாம்பவான் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
சைமண்ட்ஸ் நேற்று இரவு 11 மணிக்கு பின்னர் கார் விபத்தில் சிக்கியதாக அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
அவர் மட்டும் தனியாக காரில் சென்றுள்ளார். கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து உருண்டு விழுந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
46 வயதாகும் சைமண்ட்ஸ், அவுஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்.
1999 – 2007ம் ஆண்டுகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் உலகை அவுஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியபோது அந்த அணியின் முக்கிய தூணாக சிறந்த சகலதுறை வீரராக வலம்வந்தார் அவர். தனது வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மூலம் கவனம் ஈர்க்கப்பட்ட அவர், ஓய்வுக்கு பின் ஃபொக்ஸ் கிரிக்கெட்டின் வர்ணனைக் குழுவில் இடம்பெற்று பணியாற்றி வந்தார்.