நீர் நிரம்பிய குழியில் வழுக்கி விழுந்து தாய் மகன் உட்பட மூவர் பரிதாபகரமாக மரணமடைந்த சோக சம்பவம் கொச்சிகடை, மடம்பெல்ல, ஹல்பே கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் வழமையாக கீரை வகைகளை பறிப்பதற்காக அம்பலயாய பிரதேசத்திற்குச் செல்வதுண்டு.
கீரைகளை பறித்து கட்டுகளாக கட்டி விற்பனை செய்து தமது வாழ்க்கையை நடத்துகின்றனர்.
கடந்த 3ம் திகதி மாலையில் வழமைபோல் இம்மூவரும் கீரை பறிக்க சென்றுள்ளனர். இரவு 7 மணியாகியும் வீடு திரும்பாததனால் வீட்டாரும் அயலவர்களும் தேடிச் சென்றுள்ளனர்.
நீர்நிரம்பிய குழியில் மூவரும் விழுந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். உடனடியாக மூவரையும் அக்கரகம வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது அவர்களை பரிசோதித்த வைத்தியர் மூவரும் இறந்துவிட்டனர் எனக் கூறினார்.
அப்பிரதேசத்தில் களிமண் அகழ்ந்து விடப்பட்ட பழைய குழிகள் உள்ளன. குழியில் மழைக்கு நீர் நிரம்பியுள்ளது. இதையறியாத இவர்கள் அதனை கடந்துசெல்லும் போது வழுக்கி குழியில் மூவரும் விழுந்துள்ளதாக தெரிகிறது.
கட்டான, அம்பலயாய,கோபிவத்த ஜனபதயைச் சேர்ந்த ஒபிட்டிகலகே சுஜீவ 42 வயது தாய், சனிதுஅனுஹஸ் 10 வயது மகன், ஹங்கி இஷார 9 வயது உறவு மகன் ஆகிய மூவருமே பறிதாபகரமாக மரணமடைந்துள்ளனர்.
மூவரினதும் சடலங்கள் அக்கரகம வைத்தியசாலையிலிருந்து நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் பூதவுடல்கள் கையளிக்கப்பட்டன.