திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவ நகர் பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் அகழ்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேவநகர்-உதயபுரி மேல் வீதியிலுள்ள தனியார் காணியொன்றில் கைக்குண்டொன்று நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து வீட்டு உரிமையாளர்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார் திருகோணமலை நீதிமன்றத்திற்கு இவ்விடயம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்து இன்றைய தினம் (24) வீட்டுக்கு முன்னால் அகழ்வுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீட்டு உரிமையாளரின் சகோதரரொருவர் ஏற்கனவே விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆனாலும் குறித்த வீட்டு உரிமையாளர் தமது வீட்டுக்கு முன்னால் கைக்குண்டு கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.