திருகோணமலை பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றி வந்த இரண்டு மருந்தாளர்களுக்கு கோவிட் நேற்றைய தினம் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
கடந்த 7 நாட்களிற்கு மேலாக காய்ச்சல் தடிமல் காரணமாக அங்கு கடமையாற்றிய மருந்தாளர் ஒருவர் உடல் நிலை மோசமான நிலையில் தமக்கு சந்தேகம் இருப்பதாக வைத்தியரிடம் தெரியப்படுத்தியதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இன்னும் ஒரு மருந்தாளரிற்கு நோய் அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவரும் தொற்றாளரான இனம்காணப்பட்டார்.
குறித்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக கந்தளாய் கோவிட் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை வைத்தியசாலையின் பேச்சாளர் மேலும் கூறினார்.
குறித்த அனைவரும் அண்மையில் ஓய்வுபெற்ற மருந்தாளர் ஒருவரின் மரணசடங்கிற்கு சென்றுவந்திருந்தமை தெரியவந்துள்ளது.
இதேவேளை அரசாங்கத்தினால் சுகாதாரத் துறையினரை பாதுகாக்கும் நோக்கில் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியும் சில ஊழியர்கள் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்களில் சிலர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும்12 பேரிற்கு PCR பாரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவுகள் இன்று வெளியாகும் எனவும் தெரியவருகின்றது.
பிந்திய செய்தி;-
நேற்றைய தினம் PCR பாரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 12 பேரில் நால்வரிற்கு தொற்று உறுதியாகியுள்ளதாக இன்று காலை தெரியவந்துள்ளது. அவர்களில் ஒரு கர்ப்பிணி பெண் எனவும் தெரியவருகின்றது.
தொற்றுக்குள்ளான அனைவரும் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.