நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் பங்குபெறும் புதிய தொடர் நிகழ்ச்சியின் முதல் எபிசோட் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் விஜய் கலைக்குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரின் தந்தை S.A. சந்திரசேகர் திரைப்பட இயக்குனராகவும், தாயார் ஷோபா பாடகியாவும் முத்திரைப் பதித்தவர்கள். இவர்கள் இருவருமே விஜய்யின் ஆரம்பகால திரைப்படப் பயணத்துக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தவர்கள். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய் நடிப்பில் பல படங்களை இயக்கினார். அவற்றுள் பல படங்களின் தயாரிப்பாளராக ஷோபா பணியாற்றினார். ஷோபா தமிழ் திரையுலகில் பல கிளாசிக் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். விஜய்யின் பாட்டுத் திறமைக்கு வித்திட்டவரும் ஷோபாவே.இந்நிலையில் ஷோபா சந்திரசேகர், தற்போது பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் தமது கர்நாடக சங்கீத பாடல்கள் சம்மந்தமாக ஒரு தொடர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில், தமது பாட்டுகள் மட்டும் இல்லாமல் நடிகர் விஜய் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களையும் அவர் பகிர்ந்துகொள்ள உள்ளார்.
.
இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோட்டில் தற்போது ஷோபா அவர்கள் விஜய் பற்றி பகிர்ந்துகொண்ட தகவலில் “மே 20 ஆம் தேதி என்னுடைய மகள் வித்யாவின் நினைவுநாள். விஜய்க்கு உலகம் முழுக்க தங்கைகள் இருந்தாலும், கூட பிறந்த தங்கை என்றால் அது என் மகள்தான். இன்னைக்கும் நான் மே 20 ஆம் தேதி நான் வித்யாவின் புகைப்படத்தை அனுப்பினால் ‘எனக்கு ஞாபகம் இருக்கும்மா’ என்று சொல்வார். ஸ்கூலில் கூட அவர் ஆசிரியர்கள் ‘பள்ளியில் தங்கச்சி பற்றி பேசினால் எமோஷனல் ஆகி அழுதுவிடுவார்’ எனக் கூறுவார்கள். அவருக்கு எவ்ளோ வருஷம் ஆனாலும் அவரின் சகோதரிய மறக்க முடியாது. என்னால என் குழந்தைய மறக்க முடியாது. என் மகள் வித்யா ஞாபகமாகதான் விஜய்யின் மகளுக்கு திவ்யா என்று பெயர் வைத்தோம்.” என்று கூறியுள்ளார். விஜய்யின் சகோதரி வித்யா சிறுவயதிலேயே மறைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.