டெல்டா தொற்றுக்குள்ளான ஒருவர், நுவரெலியா- கொத்மலை பிரதேசத்துக்கும் வருகை தந்திருப்பதாக தான் சந்தேகம் கொள்வதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் நிறுவனத்தின் அத்தியட்சகர் கலாநிதி
சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
என்னுடைய தனிப்பட்ட அனுபமொன்றை இங்கு கூற விரும்புகின்றேன். நான் வசிக்கும் பகுதியில் வசிப்பவர்களில் ஒருவர், எனக்கு பெரிதும் பரீட்சையமானவர் அல்லர். தனக்கு
இருமல் மற்றும் தடிமன் இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.
நீங்கள் ஒரு பி.சி.ஆர் பரிசோதனையை உடனே செய்து கொள்ளுங்கள் எனக் கூறினேன்.
கொழும்பில் வசிப்பவராக இருந்தாலும் அவருடைய சொந்த இடம் நுவரெலியாவில் உள்ள கொத்மலை பிரதேசம். பி.சி.ஆர் செய்து கொள்ளுமாறு கூறிய அன்றைய தினமே அவர் தன்னுடைய ஊரான கொத்மலை பிரதேசத்துக்குப் புறப்பட்டு சென்றுவிட்டார்.
எனது கணிப்பீட்டின் பிரகாரம், அவர் ஒரு டெல்டா தொற்றாளராக இருக்க வேண்டும். டெல்டா தொற்று இல்லாத பிரதேசமான நுவரெலியாவுக்கு டெல்டா தொற்றை, கொழும்பிலிருந்து அவர் கொண்டு சென்றுள்ளார் என்றே நான் கருதுகின்றேன்.
அல்பா என்ற தொற்று மாத்திரமே இதுவரையிலும் நுவரெலியாவில் இருந்தது. இப்பொழுது இந்த டெல்டாவும் அங்கு சென்று விட்டது என்றே நான் கருதுகின்றேன். எதிர்காலத்தில் டெல்டா தொற்று நுவரெலியா பிரதேசத்தில் உருவாவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
இதில் மிகவும் முக்கியமான ஒரு விடயம்தான் அவருடன் தங்கியிருந்த இன்னுமொரு நபர், மறுதினம் காய்ச்சலுடன் வருகை தந்தார். சந்தேகத்துக்கிடமான நபருடன் தொடர்பில் இருந்ததால் நீங்களாவது உடனடியாக சென்று பி.சி.ஆர் பரிசோதனை ஒன்றை
செய்து கொள்ளுங்கள் என்று கூறினேன்.
அவர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தியுள்ளார். நான் தொலைபேசி அழைப்பு ஒன்றின் மூலமாக கேள்விப்பட்டேன் இரண்டாவது நபருக்கு பி.சி.ஆர் சோதனை முடிவு பொசிடிவ் என இது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒரு நிலைமை.
நாட்டு மக்களிடம் சுய ஒழுக்கத்தை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் ஆனால், இந்தச் சம்பவத்தில் சுய ஒழுக்கம் எங்கே? இவர் மூலமாக இன்னும் பலருக்கு இந்தத் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. எனவே அனைவரும் தயவுசெய்து பொறுப்புடன் நடந்து
கொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.