கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம் தற்போது ரஷ்யாவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.
கடந்த 2019 தீபாவளிக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இப்படம் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஒரு இரவில் முன்னாள் கைதியான கார்த்தி, வில்லன் கும்பலால் பாதிக்கப்பட்ட போலிஸ் அதிகாரிகளை எப்படி காப்பாற்றினார் என்பதையும்,போலிசால் பிடிக்கப்பட்ட போதை மருந்துகளை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து எடுத்துக் கொண்டு போக வரும் வில்லன் கும்பல் பற்றியும், ஒரு கான்ஸ்டபிள் 5 கல்லூரி மாணவர்களை வைத்து அந்த இரவை எப்படி கடக்கிறார்கள் என்பதையும், விடுதியில் தங்கி இருக்கும் பெண் குழந்தையை பார்க்க வரும் கைதி கார்த்தி பற்றியும், படம் பேசுகிறது.
இந்த படத்தின் வெற்றி தமிழ் தாண்டியும் பல மொழி ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. இந்நிலையில் ஜப்பானிய மொழியில் கைதி திரைப்படம் ‘கைதி டில்லி’ என்ற பெயரில், கடந்த ஆண்டு வெளியானது. மேலும் இந்த படம் ஜப்பானில் நடிகர் கார்த்தியின் முதல் வெளியீடாகும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முத்து படத்தில் இருந்தே தமிழ் சினிமாவுக்கும் ஜப்பானிய சினிமா ரசிகர்களுக்கும் இடையே தொடர்பு இருந்து வருகிறது. இதுமட்டுமில்லாமல் தற்போது இந்தியில் இந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதில் அஜய்தேவ்கன் மற்றும் தபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கைதி திரைப்படம் தற்போது ரஷ்யாவில் 121 நகரங்களில் 297 திரையரங்குகளில் இன்று முதல் வெளியாகிறது. இதனைக் கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். வெளியாகி 2 ஆண்டுகளுக்குப் பிறகும் கைதி திரைப்படம் அடுத்தடுத்து வெளிநாடுகளில் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.