யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பிரதேச சபை யில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியிருந்த இராமாவில் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கஜேன் (வயது 28) என்பரே உயிரிழந்துள்ளார்.
தூக்கில் தொங்கிய நிலையில் அவருடைய சடலம் காணப்பட்டுள்ளது.
அவருடைய மரணம் கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகுமார் கஜேன் யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படுவதாக தமிழ் காங்கிரஸ் கட்சியினரால் ஏற்கனவே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பட்டியலில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று அவருக்கு திருமண கலப்பு இடம்பெறவிருந்தது.
நேற்று இரவு தாய், சகோதரனுடன் சிறிய வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
வழக்கமாக தர்க்கம் ஏற்பட்டால் வீட்டை விட்டு வெளியேறி, பக்கத்திலுள்ள காணியில் இருந்து விட்டு, சற்று நேரம் கழித்து வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
நேற்று அவர் வீட்டை விட்டு வெளியேறிய போதும், அவர் சற்று நேரத்தினால் திரும்பி வருவார் என உறவினர்கள் நினைத்திருந்தனர்.
எனினும், நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பாததையடுத்து, அவரை தேடியுள்ளனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். வீட்டிற்கு அயலிலுள்ள காணியொன்றில், தவறான முடிவெடுத்து, உயிரை உயிரை மாய்த்த நிலையில் காணப்பட்டார்.
தற்கொலை முடிவெடுப்பவர்கள் தமது குடும்பத்தினரை தீராத துயரத்தில் ஆழ்த்தி செல்கிறார்கள். யாருக்கேனும் தனிமை, உதவி தேவையான நிலை காணப்பட்டால் உதவி எண்களை அழையுங்கள்.