ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை தொடர்ந்து அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் டி.என்.ஏ பரிசோதனைக்காக இன்று (27) காலை அம்பாறை புத்தங்கல பொது மயானத்தில் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றது.
மூன்றாவது தடவையாக மேற்கொள்ளப்படவுள்ள இப்பிரேத பரிசோதனையானது அம்பாறை பிரதான மாவட்ட நீதிபதி மற்றும் நீதிவனுமாகிய லுசாகா குமாரி தர்மகீர்த்தி முன்னிலையில் சட்ட வைத்திய அதிகாரிகளான என்.டபிள்யு.யு. தினுகா மதுசானி மற்றும் ருச்சிர நதீர ஆகியோருடன் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் வனிதா பண்டாரநாயக்க, தடயவியல் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பிரசன்னத்துடன் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படுகின்றது.
இந்நடவடிக்கையானது கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியின் மனைவி புலஸ்தினி மகேந்திரன் (சாரா ஜெஸ்மின்) என்பவர் தொடர்பான DNA பரிசோதனைக்காக சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
அத்துடன் சம்பவ இடத்திற்கு அருகில் ஊடக அனுமதி மறுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஈஸ்டர் தொடர் தாக்குதல்களின் பிரதான சந்தேகநபரான ஸஹ்ரான் ஹாஷிமின் சகோதரன் மொஹமட் ரிழ்வானால் 26.04.2019 இரவு சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.
ஈஸ்டர் தொடர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் சாரா ஜெஸ்மின் இறந்ததாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சாரா தொடர்பான மர்மங்கள் நீடித்து வரும் நிலையில் அவர் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
சாராவை அடையாளம் காண உடல் உறுப்புகள் DNA சோதனைக்கு உட்படுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.