நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் யாழில் 30க்கும் அதிகமானோர் கூடி கூட்டம் நடத்திய நிலையில் பொலிஸார் அவர்களை எச்சரிக்கை மட்டும் செய்து பத்திரமாக அனுப்பி வைத்தமை தொடர்பில் பல தரப்பினர் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை செல்வாக்கு , வசதி படைத்தவர்கள் விடயத்தில் சுகாதார பிரிவினரும் கண்டுகொள்ளாத நிலைமை தொடர்பிலும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மனோகரா சந்திக்கு அருகில் உள்ள தனியார் கட்டடம் ஒன்றில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று (12.06.2021) தினம் 30க்கும் அதிகமானோர் கூடி கூட்டம் ஒன்றினை நடாத்தியுள்னர்.
சர்வதேச சேவை அமைப்பு ஒன்றின் இலங்கைக்கான வருடாந்திர ஆளுநர் தெரிவில் போட்டியிடும் நபர் ஒருவர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து யாழில் உள்ள குறித்த சேவை அமைப்பின் அங்கத்தவர்களை குறித்த மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்து தனக்கு ஆதரவு கோரியுள்ளார்.
குறித்த கட்டடத்திற்கு முன்பாக சொகுசு வாகனங்கள் நிற்பதனை மோட்டார் சைக்கிளில் வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாண பொலிஸார் கண்ணுற்று சந்தேகம் கொண்டு குறித்த கட்டடத்தினுள் சென்று பார்த்த போது , அங்கு பயணத் தடை மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறி 30 க்கும் அதிகமானோர் கூடி இருந்தமையை கண்ணுற்றுள்ளனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை எச்சரித்து விடுவித்ததுடன் , கூட்டத்தின் ஏற்பாட்டாளர்களையும் விடுவித்துள்ளனர்.
இதேவேளை இராணுவத்தினரும் குறித்த கூட்டம் தொடர்பில் தகவல் அறிந்து அவ்விடத்திற்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்து இருந்தனர்.
பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் , கொழும்பில் இருந்து வந்த ஒருவர் யாழில் 30க்கும் அதிமானோரை மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்து கூட்டம் கூட்டியுள்ளார். அவர் தொடர்பிலோ , அல்லது கூட்டத்தில் கலந்து கொண்டவர்களையோ கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்காது விடுவித்து உள்ளனர்.
அயலவர்கள் , உறவினர்களுடன் திருமண நிகழ்வுகள் , பிறந்தநாள் நிகழ்வுகள் கொண்டாடியவர்களை 14 நாட்களுக்கு கட்டாய சுய தனிமைப்படுத்தும் சுகாதார பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பில் பாராமுகமாக இருப்பது பலர் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் சுகாதர பிரிவினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பார்களா ? என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதேவேளை, யாழ்.கொக்குவில் – குளப்பிட்டி பகுதியில் அனுமதி பெறதாது, எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 6 மீன் வியாபாரிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
தற்போதைய பயணத்தடை காலத்தில் நடமாடும் வியாபாரத்துக்கு மட்டுமே அனுமதியளித்துள்ள நிலையில் தேவையற்ற வகையில் மக்களை ஒன்று திரட்டி மீன் வியாபாரம் செய்தனர் என்ற குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அத்துடன் அத்துடன் அவர்கள் வியாபாரத்துக்கென வைத்திருந்த மீன்கள் மற்றும் அது சம்பந்தமான வியாபார பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நல்லூர் பிரதேசசபையால் ஏற்கனவே இவ்வாறான வியாபார நடவடிக்கைகளை மக்களை திரட்டி செய்ய வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தநிலையில் தொடர்ச்சியாக அப்பகுதியில் வியாபாரம் மேற்கொண்ட நிலையில் இன்றைய தினம் அவர்கள் கைது செய்யப்பட்டனர்