காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் போராட்டத்தில் நேற்று (14) கலந்து கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, பொலிஸ் சார்ஜெண்ட் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் சார்ஜென்ட், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டிருந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான பொலிஸ் ஒழுக்காற்று விசாரணையின் பின்னர், பொதுமக்களை ஆத்திரமூட்டும் வகையில் கருத்துகளை தெரிவித்த குற்றச்சாட்டில் குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் டி.எம். அமரதாச எனும், பொலிஸ் சார்ஜென்ட் கொழும்பு கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து குறித்த நபர் இன்று (15) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரை பணியில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அவர் சார்பில் 12 பேர் கொண்ட சட்டத்தரணிகள் குழுவொன்று இலவசமாக நீதிமன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பாக கைது செய்யப்படுகின்ற நபர்களுக்காக சட்டத்தரணிகள் இவ்வாறு தமது சேவைகளை வழங்கி வருகின்றனர்.
ஒருவர் தனது கருத்தைக் கூறுவது குற்றமல்ல என்றும், அது ஒரு நபரின் அடிப்படை உரிமை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக, பொலிஸ் சார்ஜென்ட் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்.
தற்போதைய நெருக்கடியை அரசாங்கமே ஏற்படுத்தியுள்ளதாகவும், நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் இவ்விடயம் தொடர்பில் தனது கருத்தை தெரிவிப்பது குற்றமல்ல எனவும் சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜென்டிற்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்