காதலனால் கொலை செய்யப்பட்ட யாழ். யுவதி மற்றும் அவரது குழந்தையினது என கூறப்படும் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் 6 வருடங்களின் பின் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதியான தனது காதலியையும், குழந்தையையும் காதலன் கொலை செய்து எரித்த இடத்தில் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே இவை மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், வவுனியாவைச் சேர்ந்த சந்தேகநபர், யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் 2015ஆம் ஆண்டு ஒப்பந்த வேலை ஒன்றுக்கு சென்றுள்ளார்.
இதன்போது அப்பகுதியில் உள்ள 19 வயது யுவதியுடன் திருமணத்திற்கு முன் உறவு கொண்ட நிலையில் அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார்.
யுவதிக்கு பிரசவமான பின் திருமணம் செய்வதாக கூறி வவுனியா – மருதன்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் திகதி அழைத்து சென்றுள்ளார்.
அங்கு காதலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற பின் காதலியையும் கொலை செய்து, உடல்களை தென்னை மட்டை, மண்ணெண்ணெய், சீனியை பயன்படுத்தி எரித்துள்ளார்.
எஞ்சிய பாகங்களை தோட்டத்தில் புதைத்துள்ளார் என தெரியவருகிறது. இந்த நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் 6 வருடங்களுக்கு பின் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பரமேஸ்வரன் சஜிந்திகா மற்றும் அவரது ஆறு மாத குழந்தை ஆகியோரே கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.