அண்மையில் களனி ஆற்றில் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பான மர்மத்தை பொலிசார் துலக்கியுள்ளனர்.
திருமணத்திற்கு புறம்பான உறவினாலேயே இந்த கொலை நடந்துள்ளது.
கொலை சூத்திரதாரிகளாக ஓய்வுபெற்ற கடற்படை வீரர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைகள் பின்னால் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, பூட்டு போடப்பட்ட நிலையில், நவகமுவ, ரணல பகுதியில் களனி ஆற்றில் சடலமொன்று மீட்கப்பட்டது.
இது தொடர்பில் விசாரணை நடத்திய நுகேகொட பொலிசார், கொலை மர்மத்தை துலக்கியுள்ளனர்.
ஹல்துமுல்லவை சேர்ந்த காமினி ஹெட்டியாராச்சி (54) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
தனது மனைவியை பிரிந்த அவர், ஹன்வெல்ல, அம்புல்கமவிலுள்ள வீடொன்றில் வேறொரு பெண்ணுடன் கடந்த ஒரு வருடமாக வசித்து வருகிறார்.
அந்த பெண் கல் தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் பணியாற்றி வந்ததாகவும், நிறுவனத்திற்கு சீமெந்து கொண்டு செல்லும் லொறிின் சாரதியாக பணியாற்றிய ஓய்வுபெற்ற கடற்படை வீரருடன் நெருங்கிய உறவை வளர்த்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
23 ஆம் திகதி இரவு பாதுகாப்பு கையுறைகள் அணிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்த இரண்டு சந்தேக நபர்கள், காமினி ஹெட்டியாராச்சியுடன் பேசி, தம்மை காவல்துறை குற்றப்புலனாய்வுத்துறையினர் என குறிப்பிட்டுள்ளனர்.
அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் விசாரணைக்கு வருமாறு கூறி, அவரது கையை பின்பக்கமாக சங்கிலியால் பிணைத்துள்ளனர்.
பின்னர் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடுவெல வீதியில் உள்ள ஒரு பெரிய தென்னந்தோட்டத்திற்கு கொண்டு சென்று,சுட்டியலால் தலையில் அடித்து கொன்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய் ரம்பக்கனவில் வசிக்கும் 49 வயதானவர். மற்ற சந்தேக நபர், அவரது உறவினராக ஹோமாகமவில் வசிக்கும் 33 வயதுடையவர்.
கொல்லப்பட்டவரின் சட்டபூர்வமற்ற மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.