முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை பெற்றுக்கொள்ள வந்த நபர் ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் வழங்கி வருகின்றார்கள். இந்த நிலையில் டீசலும்,பெற்றோலும் கிடைத்துள்ள நிலையில் காலை 8.00 மணிவரை பொலிஸாரின் பாதுகாப்புடன் பெற்றோல் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஒருவர் முரண்பாட்டினை ஏற்படுத்தி சங்கத்தின் பொதுமுகாமையாளர், பணியாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், அலுவலகத்தின் கதவினை பூட்டிவிட்டு உள் இருந்துள்ளார்கள்.
இந்த நிலையில் குறித்த நபர் கையில் வைத்திருந்த தலைக்கவசத்தினால் அலுவலக கண்ணாடி மீது தாக்குதல் நடத்தி முகாமையாளரை தாக்க முயற்சித்துள்ளார்.
இதையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன், அவரை இன்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.