அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தின் தேர்த்திருவிழாவில் இராணுவத்தை அழைத்து சுவாமி காவ வைத்த ஆலய நிர்வாகத்தின் நடவடிக்கையினால் பிரதேச மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஓரிரு தினங்களின் முன்னர் இந்த சம்பவம் நடந்தது.
கொரொனா தொற்று அபாயம் காரணமாக அணைத்து ஆலயங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது. அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமான நாள் முதல் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
தேர்த்திருவிழாவில் சுகாதார நடைமுறையெனகூறி, பக்தர்கள் ஆலயத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டவில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், இராணுவத்தினர் அழைக்கப்பட்டு, அவர்கள் மூலமே சுவாமி காவப்பட்டது.
முன்னதாக, கொடியேற்ற திருவிழாவிற்கும் இராணுவத்தினர் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆலய தொண்டில் ஈடுபடும் இளைஞர்கள் பெருமளவானவர்கள் அங்கிருக்கும் போது, முக்கியமான தேர்த்திருவிழாவில் அவர்கள் புறமொதுக்கப்பட்டு, இராணுவத்தினர் மூலம் சுவாமி காவப்பட்டதற்கு பிரதேச மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் இது குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வரும் பிரதேச மக்கள், இந்து அமைப்புக்கள் அதில் கண்மூடிக் கொண்டிருக்கின்றனவா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த ஆலயத்தில் ஏற்கனவே சில வருடங்களாக இராணுவத்தினரை வைத்து தேர் இழுக்கப்படும் சம்பவம் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.