மலையகத்தின் முக்கிய நகரங்களிலுள்ள பஸ்தரிப்பிடங்கள், புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபடும் சிறுவர்களைத் தேடும் விசேட நடவடிக்கையொன்று நேற்று (5) மலையக மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய, நுவரெலியா, ராகலை, தலவாக்கலை, ஹட்டன், மஸ்கெலியா, மற்றும் பொகவந்தலா உள்ளிட்ட பிரதான நகரங்களில் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்ததாக, மலையக மக்கள் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்தார்.
இதன்போது, குறித்த சிறுமிகள் தங்களது குடும்ப வறுமை காரணமாக பத்தி விற்பனை தொழிலில் ஈடுபடுவதாகவும், தங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தினை ஈடுசெய்யக்கூடிய உதவிகள் கிடைத்தால் தாங்கள் இதனை கைவிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த சிறுமிகளிடம் இருந்த மொத்த ஊதுபத்திகளும் மலையக மக்கள்
முன்னணியின் குழுவினாரால் விலைகொடுத்து வாங்கப்பட்டதுடன், அவர்களுக்கு தேவையான உதவிகளை எதிர்காலத்தில் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் இதன் போது தெரிவித்தனர்.
அத்துடன், இது தொடர்பாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே. இராதாகிருஸ்ணனால், பாராளுமன்றத்தில் உரையாற்றப்பட்டதாக சுட்டிக்காட்டிய புஸ்பா விஸ்வநாதன், இராதாகிருஸ்ணனின் வழிகாட்டலுக்கு அமைய இது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றார்.