Home Local news உயிர்த்த தினத்தில் உதிரத்தால் குளித்தார்!

உயிர்த்த தினத்தில் உதிரத்தால் குளித்தார்!

மனிதம் மரணித்த இதே நாள். அன்று
21.04.2019.

காலையில் 09 மணி போல ஒரு போன் கோல் “கொழும்பில குண்டு வெடிச்சுட்டு கனபேர் செத்துட்டாங்க போல” என

இந்த காலத்தில எவன்டா குண்டு வைக்க போறான். ஏதாவது வெடிவிபத்தா இருக்கும் என FB ல எவனாவது போஸ்ட் போட்டு இருப்பான் என தேடிட்டு போனால் ,

நீர்கொழும்பு கட்டுவான்பிட்டிய செபஸ்ரியான் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு என குண்டு வெடிப்பால் சேதமான தேவாலயத்தின் படங்கள் கண்ணில் பட்டது. அதனை முகநூலில் பகிர்ந்தேன்.

நீர்கொழும்பு கொச்சிக்கடையை கொழும்பு என மாறி சொல்லிட்டாங்க போல என நினைத்துக்கொண்டு என்ன என்று குண்டு வெடிச்சிருக்கும் என யோசித்துக்கொண்டு இருந்த போது ,

இன்னொரு போன் கோல் இது கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம் இல்லையே. அங்க தானே குண்டு வெடிச்சது. இது எங்கே எடுத்த படம் ? என .. இல்லை இது நீர்கொழும்பு செபஸ்ரியான் தேவாலய முகநூலில் இருந்தே எடுத்தேன். அங்க தான் குண்டு வெடிச்சது என்றேன். இல்லை கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம் தான் அது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் என்றார்கள்.

சரி என தொடர்ந்து தேடிட்டு இருந்தால் இரண்டு தேவாலயங்களில் குண்டு வெடிப்பு என உறுதிப்படுத்திட்டு இருக்க. இன்னொரு போன் கோல் அண்ணே மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்தில் ஏதோ வெடிப்பு சம்பவம் போல பெரும் சத்தம் கேட்டது. இப்ப பெரும் புகை எழும்பிக்கொண்டு இருக்கு என்ன என தெரியலை என்றார்கள்.

ஐயையோ இதென்னடா என தொடர்ந்து தேடினால் , அடுத்தடுத்து நட்சத்திர விடுதிகளில் குண்டு வெடிப்பு என செய்தி தளங்களில் பிரேக்கிங் போட தொடங்கிட்டாங்க.

யார் ? எவன் ? ஏன் ? என்ற கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. மதியம் 1 மணி போல (குண்டு வெடிச்சு நாலு மணித்தியாலத்திற்குள் ) தெமட்ட கொடையில் பதுங்கி இருந்தவர்களை கைது செய்ய முற்பட்ட போது அவர்கள் குண்டுகளை வெடிக்க வைத்தார்கள் எனும் செய்தி. பிறகு பார்த்தா தெகிவளையில் வீடொன்றினுள் குண்டு வெடிப்பு எனும் செய்தி.

இப்படியாக அன்றைய தின தொடர் குண்டு வெடிப்பில் 310க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர்.

குண்டு வெடிப்புக்களை தொடர்ந்து , மாலை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு போடப்பட்டு தேடுதல்கள் முடுக்கி விடப்பட்டன . தேடப்படும் நபர்கள் பற்றிய படங்கள் பொலிசாரினால் வெளியிடப்பட்டன. படங்கள் வெளியிடும் அவசரத்தில் அதில் ஒரு வெளிநாட்டு பிரபலத்தின் படத்தையும் சேர்ந்தது வெளியிட்டு விட்டாங்க.

இப்படியாக அனைவரின் வாயிலும் சஹாரான் எனும் வார்த்தை உச்சரிக்கப்பட்ட தொடங்கியது. ஊடகங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள், படங்கள் என தொடர்ந்து வெளிவந்தன.

வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் குண்டுகள் தாங்கிய வாகனங்களாகவே பார்க்கப்பட்டன. அநாதரவாக ஒரு மோட்டார் சைக்கிளோ , காரோ எது நின்றாலும் குண்டு தாங்கிய வாகனம் என சந்தேக கண்களோடு நோக்கப்பட்டடன. பொலிசாருக்கு தகவல்கள் பறந்தன.

இவ்வாறாக தொடர்ந்த பதட்டம், சாய்ந்த மருதில் வெடித்த குண்டுடன், சஹாரானின் குண்டு வெடிப்பு தொடர் நிறைவுக்கு வந்தது

அதனை தொடர்ந்து வந்த நாட்களில், 2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக பார்த்தவர்கள் பத்து வருடங்களின் பின் 2019ஆம் ஆண்டு ஏப்பிரல் 22 முஸ்லீம் மக்களை தீவிரவாதிகளாக பார்த்தனர்.

குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் முஸ்லீம் இளைஞர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வந்தனர். அதனால் முஸ்லீம் மக்கள் மீதான சந்தேக பார்வைகள் அதிகரித்தன. சில இடங்களில் அவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றப்பட்டது. முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிய தடை விதிக்கப்பட்டன.

சோதனை சாவடிகளில் முஸ்லீம் மக்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவ்வேளையிலையே சோதனை சாவடியில் நிற்கும் இராணுவத்தின் மீது தமிழ் இளையோர் சிலருக்கு கரிசனை ஏற்பட்டு கொட்டில் போட்டு கொடுத்து , மைலோ கொடுத்தனர்.

அந்த சம்பவங்கள் , 2009 தமிழ் மக்கள் அழிக்கப்பட்டு வெற்றி விழா கொண்டாடப்பட்ட போது பாற்சோறு வழங்கிய சில முஸ்லீம் மக்களுக்கு சற்றும் குறைவில்லாத செயற்பாடே இராணுவத்திற்கு மைலோ கொடுத்த செயற்பாடும். .

ஆனாலும் முஸ்லீம் குடியிருப்புக்கள் , பள்ளிவாசல்களை இலக்கு வைத்து நடததப்பட்ட தேடுதல்களில் பல வெடி பொருட்கள் மற்றும் கூரிய ஆயுதங்கள் என்பன மீட்கப்பட்டன. சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பல முஸ்லீம் இளைஞர்கள் இன்றும் தடுப்பு காவலில் வைக்கப்ப்பட்டுள்ளனர்.

” இலங்கையருக்கு தற்கொலைத் தாக்குதல்கள் என்பது புதிய ஒன்றல்ல. எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், பிரிவினைவாதத்திற்கு எதிராக இடம்பெற்ற யுத்த காலப் பகுதியில் நாம் கண்ட தாக்குதல்களை விடவும் வித்தியாசமானதாகும்.” என பிரதமர் மஹிந்த ராஜபக்சே நேற்றைய தினம் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த குண்டு வெடிப்பு தொடர்பில் கடந்த ஒரு வருடமாக நானும் என் சந்தேகத்திற்கு விடை தேடினேன். இன்று வரை கிடைக்கவில்லை.

1. குண்டு தாரிகளின் நோக்கம் என்ன ?
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது ஒரு நோக்கம் இருந்தது. அது அவர்கள் சொல்வது போன்று பிரிவினை வாதமே அல்லது நாங்கள் சொல்வது போன்று எம் மண் மீட்பு போராட்டமோ. அதில் ஒரு நோக்கம் இருக்கு. இவர்களின் நோக்கம் என்ன ?

2. எந்த இடத்திலும் அவர்களுக்கு தற்கொலை தாக்குதல் நடத்த வேண்டிய தேவை இல்லை. குண்டை அந்த Bag உடன் வைத்து விட்டு வந்து ரிமோல்ட் மூலமோ அல்லது டைம் செற் பண்ணி வெடிக்க வைத்திருக்கலாம். தற்கொலை தாக்குதல் நடத்த வேண்டிய தேவை என்ன ?

3. தேவாலயங்கள் , நட்சத்திர விடுதிகளை இலக்கு வைக்க வேண்டிய தேவை என்ன ? ஆலயங்கள், விகாரைகள் , சந்தைகள் , பஸ்நிலையங்கள் , புகையிரத நிலையங்கள் இலக்காக இல்லாம போனதன் காரணம் என்ன ?

4. இந்த குண்டு வெடிப்பின் மூலம் அவர்கள் சொல்ல வந்தது என்ன ?

5. ஒரு அமைப்பை கட்டி எழுப்பிய தலைவன் தானும் சாவதன் மூலம் அந்த அமைப்பின் நோக்கம் (இருந்திருந்தால்) அதனை கொண்டு நடத்துவது யார் ? என ஏன் சிந்திக்காம விட்டார்கள்.

6. தற்கொலைதாரிகள் யாரும் வறுமையில் வாடியவர்களோ , கல்வியறிவு குறைந்தவர்களோ இல்லை. இருவர் கோடீஸ்வர சகோதரர்கள். அவர்கள் எவ்வாறு தற்கொலை தாக்குதலுக்கு துணிந்து தமது உயிரை விட்டார்கள்.

7. நான்கு மணித்தியால இடைவெளியில் குண்டுதாரிகள் தொடர்பிலான தகவல்களை திரட்டி அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்களை நெருங்க முடிந்துள்ளது. எனவே அவர்கள் தொடர்பில் முன்னரே அறிந்திருந்தார்களா ?

8. தற்கொலை தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்னரே புத்தளம் பகுதியில் ஒரு தென்னம் தோட்டம் ஒன்றில் பயிற்சி முகாம் கட்டமைப்பை கண்டு பிடித்தார்கள் , வெடி மருந்துகள் உள்ளிட்ட சிலவற்றை மீட்டார்கள். அங்கிருந்த இளைஞர்களை கைது செய்தனர். சிலை உடைப்புக்கள் தொடர்பில் சிலரை கைது செய்தார்கள். பின்னர் அவர்கள் பிணையில் வெளியே வந்தார்கள். அதன் மர்மம் என்ன ?

09. “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறும் திகதி, இலக்கான இடங்கள், பங்குபற்றிய தீவிரவாதிகளின் பெயர்கள், முகவரிகள், அடையாள அட்டை இலக்கங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் கூட எமது நட்பு நாடொன்றின் உளவுப் பிரிவினரால் முன்கூட்டியே அப்போது ஆட்சியிருந்த இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்தன. ” என பிரதமரின் நேற்றைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக எல்லாம் தெரிந்தும் கோட்டை விட்டுள்ளார்கள். அதற்கான காரணம் என்ன ?

எது எப்படியோ .. உண்மைகள் எப்போதாவது வெளிவரலாம் எனும் நம்பிக்கை மட்டுமே எஞ்சியுள்ளன.

மாண்டவர்கள் மீண்டு வரப்போவதில்லை. அவர்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதனை தவிர எம் கையில் எதுவுமில்லை.
Sriramachandaran Mayutharan

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஈஸ்டர் தாக்குதல் : கொல்லப்பட்ட மக்கள் மலையகத்திலும் நினைவுகூரப்பட்டனர்
Next articleநடுவீதியில் வைத்து வயோதிப தந்தையை கொடூரமாக தாக்கிய மகள்