09:20 PM
பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கு சொந்தமான சில்லறை விற்பனை நிலையமொன்று பண்டாரவளையில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
09:15 PM
வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் இல்லத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
09:11 PM
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் கீழ் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
08:58 PM
மைனா கோகம மற்றும் கோட்டா கோகம போராட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற களேபரங்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளோரின் எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது.
08:54 PM
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
08:36 PM
ஹொன்னந்தர பகுதியிலுள்ள முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீடும் சற்று முன்னர் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
08:30 PM
மாத்தறையில் உள்ள எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் இல்லத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முற்பட்ட போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.
07:51 PM
அலரி மாளிகைக்குள் பிரவேசிக்க முயன்றவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
06:38 PM
பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
06:10 PM
சியாம், அமரபுர மற்றும் ராமண்ணா நிகாயா பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அமைதியான போராட்டக்காரர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
06:09 PM
மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்றைய ரயில்கள் அந்தந்த இடம் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
05:55 PM
அரசாங்க ஆதரவு மற்றும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 151ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
05:53 PM
முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் குருநாகலிலுள்ள கட்சி அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
05:49 PM
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்துக்கு தீவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
05:47 PM
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் சிலவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதுடன், தீவைப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இந்திக அனுருத்தவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் நிமல் லன்சா எம்.பியின் வீடு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.
05:34 PM
மொரட்டுவை வில்லோரவத்தையில் அமைந்துள்ள மொரட்டுவை மேயர் சமன் லால் பெர்னாண்டோவின் இல்லத்திற்கு சிலர் தீ வைத்துள்ளனர். நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
05:31 PM
அரசாங்க ஆதரவாளர்களை ஏற்றிவந்த தனியார் பஸ்ஸொன்று மாளிகாவத்தை பகுதியில் வைத்து தீவைப்பு
05:19 PM
பொலிஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து மதுபான சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
05:07 PM
நிட்டம்புவை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். ஒருவர் கவலைக்கிடம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
04:30 PM
இன்று இடம்பெற்ற களேபரத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
04:08 PM
அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கண்டித்துள்ளதுடன், முழுமையான விசாரணை நடத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
04:02 PM
அரசாங்க ஆதரவாளர்கள் பயணித்த பஸ் மீது மஹரகமவில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
03:49 PM
“கோட்டா ஹோ கம” வின் மீது தாக்குதல் நடத்திய ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் சிலர், போராட்டக்கார்களிடம் சிக்கிக்கொண்டனர். அவர்களை போராட்டக்காரர்கள் முழந்தாளிட வைத்துள்ளனர்.
03:43 PM
கொழும்பில் உள்ள மைனாகோகம மற்றும் கோட்டாகோகம போராட்டத் தளங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 78 பேர் காயமடைந்துள்ளனர்.
03:39 PM
2000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் இன்று (09) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்
03:35 PM
காலி முகத்திடல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
03:31 PM
சிக்கிய ராஜபக்ஷ ஆதரவாளரை தூக்கி குப்பை வண்டியில் போட்டு தள்ளிக்கொண்டு போகும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் குதித்திருப்போர்
03:28 PM
40 க்கும் மேற்பட்டோர் காயம், அம்புலன்ஸ் சமிஞ்சை ஒலி சத்தம் சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக கேட்கிறது.
03:22 PM
காலி முகத்திடலில் துரத்தப்பட்ட பிரதமரின் ஆதரவாளர்கள் பேரவெவவில் குதித்து தத்தளிக்கின்றனர்
03:13 PM
பல்வேறு தொழிற்சங்களின் உறுப்பினர்கள் பேரணியாக கோட்டாகோகம நோக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலி முகத்திடலில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டக்காரர்கள் மீது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து அந்தப் பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் நிலவி வருகின்றது.
அலரி மாளிகையில் இன்று(09) காலை பிரதமரை சந்தித்த ஆதரவாளர்கள் அதனை தொடர்ந்து காலி வீதியில் அமைக்கப்பட்டிருந்த மைனாகோகம பகுதியில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் அப்பகுதியிலிருந்த கூடாரங்களையும் அகற்றியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரதமரின் ஆதரவாளர்கள் கோட்டாகோகம பகுதிக்கு சென்று அங்கிருந்த கூடாரங்கள் சிலவற்றை அகற்றியிருந்ததுடன் சில கூடாரங்களை தீயிட்டு கொளுத்தியிருந்தனர்.
இதனையடுத்து, அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் கட்டுப்டுத்துவதற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் அழைக்கப்பட்டனர்.
பதற்ற நிலையை தணிப்பதற்கு கண்ணீர்ப்புகை பிரயோகமும் நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, முதலில் மேல் மாகாணத்திலும் பின்னர் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.