Home Local news ஆட்டத்தை காட்டி அடங்கிய மஹிந்த ராஜபக்ச

ஆட்டத்தை காட்டி அடங்கிய மஹிந்த ராஜபக்ச

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.

இதனை பிரதமரின் மகன் ரோஹித ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆட்டத்தை காட்டி அடங்கிய மஹிந்த ராஜபக்ச

அலரிமாளிகையில் கூடியிருந்த மக்கள் சார்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (09) முற்பகல்ஆற்றிய விசேட உரை

நீங்கள் எப்போதும் எங்களுடன் இருந்தீர்கள் என்று எனக்குத் தெரியும். இன்றைக்கு இந்த இடத்திற்கு வர முடியாவிட்டாலும் எப்பொழுதும் எம்முடன் எம்முடன் இருக்கும் இந்நாட்டு மக்களையும் நாம் நினைவுகூர வேண்டும்.

இலங்கையின் நீண்டகாலமாக காணப்பட்ட பொருளாதார நெருக்கடியானது கொவிட் தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் தீவிரமடைந்தது என்பதை நான் உங்களுக்கு விசேடமாக கூறவேண்டியதில்லை. இன்று அந்த நெருக்கடியானது அரசியல் மற்றும் சமூக நெருக்கடியாக மாறியுள்ளது.

பொருளாதார வல்லுநர்கள் கூறுவது போன்று 1930 களில் உலகில் ஏற்பட்டது போன்று 30 மடங்கு அதிகமான பொருளாதார சரிவு கொவிட் காரணமாக ஏற்பட்டது என்பதை நான் விசேடமாக குறிப்பிட வேண்டியதில்லை. இதன் விளைவாக உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பணவீக்கம் அதிகரித்தது. எண்ணெய் விலை உயர்ந்தது. விநியோகம் மற்றும் மூலப்பொருட்கள் வலையமைப்பு சரிந்தது மற்றும் உணவு உற்பத்தி ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டது.

எனவே, அரசாங்கம் என்ற வகையில் நாம் அந்த புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பொதுவாக நான்கைந்து வருடங்களுக்கு செலவாகும் சுகாதாரச் செலவை ஒரே வருடத்தில் நமக்கு ஏற்க வேண்டியிருந்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை. சுற்றுலா மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் வருமானத்தை இழந்தோம். மக்களின் உயிரின் பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுத்ததால் நாங்கள் நிறைய இழந்தோம் என்பது உங்களுக்குத் தெரியும்.

இத்தகைய சூழ்நிலையில் நம்மைப் போன்ற ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பது பெரிய சவாலாக உள்ளது. விவசாயிகள், உழைக்கும் மக்கள், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் என சிறு உற்பத்தியாளர்கள் முதல் பெரிய தொழிலதிபர்கள் வரை அனைத்து மக்களும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் துன்பப்படுகின்றார்கள் என்றால் நாடு நெருக்கடியில் உள்ளது என்று பொருள்.

2009ஆம் ஆண்டு நான் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இதுபோன்றதொரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை விளம்பரம் இன்றி மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் தீர்க்க முடிந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்போது நாங்கள் செய்தது பிரச்சினையை அடையாளம் கண்டோம். தீர்வுகளுக்கு கவனமாகக் செவிமடுத்து, அதற்கான அறிவை கொண்ட அதிகாரிகளை நியமித்து’ நெருக்கடியைத் தீர்ப்பதற்கு செயற்பட்டமை மாத்திரமே.

எனவே ஒரு நெருக்கடி என்பது தீர்வு இல்லாத ஒன்றல்ல. உங்களுக்குத் தெரியும், இந்த பூமியில் ஒரு அரசியல்வாதியாக, உங்கள் வெற்றியையும் உங்கள் துன்பத்தையும் நான் உணர்கிறேன் என்பதை நான் உங்களுக்கு விசேடமாகச் சொல்லத் தேவையில்லை. எனவே, ஆர்ப்பாட்டங்கள், போராட்டம், ஹர்த்தால் என்பன எமக்கு அன்றும் இன்றும் புதிதல்ல. ஆனால், ஒரு நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அல்லாமல், மக்களின் முன்னேற்றத்திற்காக நாம் பாடுபடுவது முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எனவே, நூலறுந்த காத்தாடியைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் பார்த்திருப்பது பயனற்றது. இந்த மக்களின் பிரச்சினைகளுக்குப் பின்னால் சிலர் ஒளிந்துகொண்டு, மக்களின் தூண்டுதலின் பேரில் நாட்டை செயலிழக்கச் செய்து அராஜகத்திற்கு வழி வகுத்து வருவதை நாம் மறந்துவிடக் கூடாது.

எதிர்ப்புகள் ஏற்படலாம். அவற்றைத் தீர்க்கும் வழியை நாம் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறான தீர்வுகளை வழங்குவதற்காக நாட்டின் அரசியலமைப்பை புறந்தள்ளும் உரிமை எம் எவருக்கும் இல்லை. எனவே சவால்களை எதிர்கொண்டு சவால்களை முறியடிக்க முயற்சிப்பதே எனது கொள்கை. அப்படி இல்லாமல் சவால்களில் இருந்து தப்பித்து ஓடும் பழக்கம் எனக்கு இருந்ததில்லை என்றே கூற வேண்டும்.

எனவே, எதிர்காலத்திற்கு தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்தாமல் இருப்பது முக்கியம். இந்த விடயத்தில் பாராளுமன்றத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும் இறையாண்மையை வழங்கும் மக்களுக்கும் அந்த பொறுப்பு உள்ளது.

இன்று எதிர்க்கட்சிகள் நாட்டின் பொருளாதார நெருக்கடியில் தனது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை கடைப்பிடிப்பது இரகசியமல்ல. அவர்களுக்குத் தேவை அதிகாரம் மட்டுமே. ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்று கூறினோம் ஆனால் அழைப்பை உதறித் தள்ளினார்கள். தற்போது பொறுப்பேற்க கூறினாலும் அவர்கள் இருப்பது விருப்பம் ஆனால் பயம் என்ற இரண்டு நிலைப்பாட்டிலாகும். பொறுப்பேற்பதா? இல்லையா?. விருப்பம் ஆனால் பயம்.

இதன்போது பொதுமக்களுக்கு பொறுப்பு கூறுவதாயின், நாட்டிற்கு பொறுப்பு கூறுவதாயின் இவ்வாறு பின்னோக்கி செல்லும் மக்கள் பிரதிநிதிகள் உங்களை பாதுகாப்பார்கள் என்று எனக்கு ஒருபோதும் நம்பிக்கையில்லை.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வாக, இலங்கையின் மஹாநாயக்கர்கள், கர்தினால், சட்டத்தரணிகள் சங்கம் உட்பட சில அரசியல்வாதிகளும் சிவில் சமூக அமைப்புகளும் சர்வகட்சி அரசாங்கத்தை முன்மொழிகின்றனர்.

அதன்படி அந்த முன்மொழிவை முன்வைத்த அனைத்து தரப்பினரும் எதிர்காலத்தில் நாடு எதிர்கொள்ளும் சவால்களை எவ்வாறு ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எனவே ஜனாதிபதியும் எவ்வித தடையுமின்றி தீர்மானத்திற்கு வர முடியும்.

ஆனால், எவ்வித தலையீடும் இல்லாமல், மக்கள் நலனுக்காக யாரேனும் நல்ல நடவடிக்கை எடுத்தால், எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்பதை நினைவூட்ட வேண்டும். ஆனால் இந்த நிகழ்வுகளில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்திய முகாமின் 69 மில்லியன் மக்களின் அபிலாஷைகளை மிதிக்க யாருக்கும் உரிமை இல்லை.

அன்று 2015ல் தோல்வி அடைந்தோம். நான் அரசியலை விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றேன். உங்கள் நம்பிக்கைதான் என்னை அரசியலுக்கு கொண்டு வந்தது. நீங்கள்தான் அன்று மெதமுலனவிற்கு வந்து என்னை அழைத்து வந்தீர்கள். அப்போது மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. அந்த மக்கள் எங்களுக்காக பெரும் தியாகங்களை செய்தனர்.

எப்போதும் மக்களுக்கு பணிவான தலைவனாக இப்போது உங்களிடம் கேட்கிறேன். நாம் இப்போது என்ன செய்வது?

(பிரதமரை இராஜினாமா செய்ய வேண்டாம் என்று மக்கள் கூச்சலிடுகிறார்கள்)

அதாவது நான் இராஜினாமா செய்ய வேண்டியதில்லை. அரசியலில் நான் எப்பொழுதும் நாட்டின் பக்கமும், மக்களின் பக்கமுமே இருந்தேன் என்பது உங்களுக்குத் தெரியும்.

என் வாழ்வில் அழியாத நினைவு என்றால், அது இரண்டான பிளவடையவிருந்த தாய்நாட்டை காப்பாற்ற முடிந்த நினைவுதான். இது என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக இருக்கும். எனவே அந்த வெற்றியை மக்களுக்கு வழங்கிய மாதம் இந்த மே மாதம்.

இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக அன்றும் நாளையும் உங்களுடன் ஒரே தீர்மானத்திற்கு வர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த நம்பிக்கை என்றும் மாறாது என்பதை நினைவூட்டுகிறேன். நான் எப்போதும் கூறுவது முதலாவது தாய்நாடு, இரண்டாவது தாய்நாடு, மூன்றாவதும் தாய்நாடு.

எனவே, மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை எந்த வகையிலேனும் விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதே எங்களின் ஒரே நோக்கம்.

நாம் மேலும் ஆற்றில் இருந்து நீர் அருந்திவிட்டு கடலை போற்றுபவர்கள் பற்றி பேசி பயனில்லை. அவர்கள் குறித்து மக்கள் முடிவெடுப்பார்கள். நாங்கள் எதிர்காலத்திற்கு முகங்கொடுப்போம். ஒன்றாக இணைந்து நாட்டுக்காக நமது கடமையை செய்வோம்.

அதற்காக நீங்கள் தொடர்ந்து எங்களுடன் வலுவாக நிற்பீர்கள் என்று நம்புகிறேன்.

அன்றும் இன்றும் கூறுவதுதான் முதலாவது தாய்நாடு, இரண்டாவது தாய்நாடு, மூன்றாவதும் தாய்நாடு.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமொட்டுக் கட்சி Mp இந்திக்க அனுருத்தவின் நீர்கொழும்பு வீடு அடித்துடைப்பு
Next articleசுகாதார துறையினர் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு:முழு நாடும் ஸ்தம்பிக்கும் நிலைமை